நான்காவது சர்வதேச காது கேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த மணிகண்டன் காமராஜ், சமீஹா பர்வீன், சுதன் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 28 தேதி வரை நடைபெற உள்ளன.


டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த சூழலில், இந்திய விளையாட்டு சங்கத்தின் புறக்கணிப்பை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கு நடத்தி வெற்றி பெற்ற குமரி வீராங்கனை சமீஹா பர்வீனால் போலந்தில் நடைபெறும் தொடரும் தமிழ்நாடு மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.


இந்த போட்டிகளில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரையிறுதி வரை சென்ற திருச்சி வீரர் மணிகண்டன் இறுதிப்போட்டிக்கு தேர்வாகவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் நீளம் தாண்டுதல் அரையிறுதி போட்டியில் மணிகண்டன் காமராஜ் 2-ம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெலாரஸ் வீரர் மெய்ஸ்ட்ரென்கா அலெக்சாண்டர் 7.19 மீட்டர் தாண்டி முதலிடமும், இந்தியா சார்பில் விளையாடிய மணிகண்டன் காமராஜ் 6.87 மீட்டர்கள் தாண்டி 2-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.


டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தேர்வானார் மணிகண்டன். இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி வரை முன்னேறி தோல்வியடைந்தாலும், நீளம் தாண்டுதலில் ஏறக்குறைய பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.


திருச்சி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த காமராஜ் – செல்வி தம்பதிக்கு பிறந்தவர் மணிகண்டன். இவருக்கு 2 தங்கைகள் உள்ளனர். பிறவியிலேயே செவித்திறனை இழந்த மணிகண்டனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். செவித்திறன் இல்லையே என்று துவண்டுவிடாமல், தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார் மணிகண்டன் காமராஜ்.


இவரது திறமையை அறிந்த காது கேளாதோர் சங்கத் தலைவர் ரமேஷ் பாபு, தொடர்ந்து ஊக்கப்படுத்தி இந்திய அளவிலான காது கேளாதோர் தடகள போட்டிகளில் பங்கேற்க செய்தார். அதில் கலக்கிய மணிகண்டன் காமராஜ், 2017-ம் ஆண்டு இந்திய அளவில் 5 பதக்கங்களையும் 2019-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 4 பதக்கங்களையும், 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேசிய தடகள போட்டிகளில் 4 பதக்கங்களையும் கைப்பற்றி வெற்றிமகனாக திகழ்கிறார்.


பேர் சொல்லும் பிள்ளை என்பார்கள். இந்த வார்த்தைகளுக்கு பாத்திரமாக தனது தந்தை காமராஜின் பெயரை நெஞ்சில் சுமந்தபடி போலந்தில் ஓடுகிறார் மணிகண்டன். எதிர்வரும் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் மணிகண்டன் தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித் தருவார் என நம்புவோம்.