இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரராக விளையாடி ஓய்வுபெற்ற பின் சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெயரில் சர்ச்சைகளை பேசி வருகிறார். இதில் கிரிக்கெட் வீரர்கள் பலர் வெளிநாட்டு வீரர்களை விமர்சனம் செய்து ஃபேமஸ் ஆவார்கள், ஆனால் சொந்த நாட்டு வீரர்களையே விமர்சனம் செய்து ரசிகர்களிடமிருந்தும், கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் வசமாக வாங்கி கட்டி கொள்வது சஞ்சய் மன்ஞ்ரேக்கரின் தனி ஸ்டைல். சாதனைகளை போற்றி கிரிக்கெட் வீரர்கள் பேசப்படுவதும், ட்ரெண்டாவதும் பார்த்திருப்பீர்கள், ஆனால் திட்டி தீர்ப்பதற்காகவே #SanjayManjrekar என்னும் ஹாஷ்டாக் பலமுறை ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன பெருமையும் இவரையே சேரும்.


கடந்தாண்டு வாங்கிய அடிக்கு பின் கொஞ்சம் அமைதி காத்து வந்த மன்ஞ்ரேக்கர், தற்போது மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். அண்மை காலத்தில் சஞ்சய் மன்ஞ்ரேக்கர் கொளுத்திப்போட்ட டாப் 5 சம்பவங்களை தற்போது காணலாம்...


1) ரவீந்திர ஜடேஜா vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 



2019 உலகக்கோப்பை நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்திய அணி சிறப்பாக விளையாடி கொண்டிருந்த நேரத்தில், ரவீந்திர ஜடேஜா குறித்து ஒரு கருத்து கூறி அனைவர் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார் சஞ்சய் மன்ஞ்ரேக்கர். "ரவீந்திர ஜடேஜா ஒரு பிட் & பீசஸ்" அதாவது முழுமையான வீரர் இல்லை என்ற குண்டை போட்டார் சஞ்சய் மன்ஞ்ரேக்கர். இது மிக பெரிய சர்ச்சையாக உருவெடுக்க, அரையிறுதி போட்டியில் களமிறங்கிய ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். 






தன் பேட்டிங்கால் பதிலடி கொடுத்த ஜடேஜா, ட்விட்டரில் சஞ்சய் மன்ஞ்ரேக்கரை குறிப்பிட்டு "உன்னை விட நான் இரண்டு மடங்கு அதிக அளவிலான போட்டிகளை விளையாடியுள்ளேன், விளையாடி கொண்டே இருக்கிறேன். மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், உங்களுடைய வயிற்றுப்போக்கு ஏற்படும் வார்த்தைகளை போதுமான அளவு கேட்டுவிட்டேன்" என்று பதிவிட்டார்.


2) ஹர்ஷா போக்லே vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 



உலக கிரிக்கெட்டில் இவரின் வர்ணனைக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு - அவர் தான் ஹர்ஷா போக்லே. பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் வீரர்கள் பின்னாளில் வர்ணனையாளர் ஆவார்கள், ஆனால் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இவரின் கிரிக்கெட் அறிவு ஆழமானது. ஒருமுறை அதை சீண்டி பார்த்த சஞ்சய் மன்ஞ்ரேக்கர் இந்தியா vs வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது நேரலையில் ஹர்ஷாவை வம்பிழுத்தார். சில முறை பேட்ஸ்மேன் தங்கள் ஹெல்மெட்டில் பவுன்சர் பந்துகளை அடி வாங்கினர், இதனை கண்ட ஹர்ஷா போட்டி முடிந்தவுடன் பேட்ஸ்மேன் இடம் பிங்க் பந்துகள் கண்ணுக்கு தெரிவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என கேட்கவேண்டும் என்றார். உடனே "நீங்கள் கேட்டுதான் தெரிஞ்சிக்கணும் ஹர்ஷா, ஆனால் நான் கிரிக்கெட் விளையாடியுள்ளேன், அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய யோசனை எனக்கு உள்ளது" என சஞ்சய் மன்ஞ்ரேக்கர் தெரிவித்தார். அதாவது களத்தில் இறங்கி விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு, உங்களுக்கு இல்லை என குத்தி காண்பித்தார். ஹர்ஷா போக்லே கேட்டு தெரிந்துகொள்வதில் தவறில்லை என முடித்துக்கொண்டார். இது மிக பெரிய சர்ச்சையாக மாற "நான் தவறு செய்துவிட்டேன், இந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன்" என சஞ்சய் மன்னிப்பு கேட்டார்.


3) ஹர்திக் பாண்டியா vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர்


ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு முன்பு, அந்த தொடர் குறித்து பேசிய சஞ்சய் மன்ஞ்ரேக்கர் "என்னுடய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இடமில்லை, இந்திய அணி மிடில் ஆர்டரில் இவரை தேர்வு செய்து தவறு செய்துவிட்டது" என்றார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா அந்த தொடரில் பந்துவீசாமல், பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டார். ஒருநாள் போட்டிகளில் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக விளையாடும் தகுதி கிடையாது என்றார். அந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 2 முறை 90 ரன்களை கடந்து 210 ரன்கள் விளாசினார். இறுதியாக என் கணிப்பை பாண்டியா பொய் ஆக்கிவிட்டார் என மூக்கை உடைத்து கொண்டார் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்.


4) ரவீந்திர ஜடேஜா vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர்



ஜடேஜாவிற்கு இந்திய டெஸ்ட் அணியில் அதிகம் வாய்ப்பு கொடுப்பதால், ரவிச்சந்திரன் அஸ்வினால் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. எங்கே நமது இடம் கேள்விக்குறியாகி விடுமோ என அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 5 சதம் விளாசியுள்ள அஸ்வின் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர். ஜடேஜாவை தேர்வு செய்து இந்திய அணி அஸ்வின் ஆட்டத்தை வீண் செய்கிறது என அஸ்வின் vs ஜடேஜா இடையே கொளுத்தி போட்டார். ஆனால் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பவே அஸ்வின், ஜடேஜா இருவரும் அணியில் தேர்வு செய்யப்படுவதாக கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்தார்.


5) ரவிச்சந்திரன் அஸ்வின் vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர்



இது தான் சஞ்சய் மன்ஞ்ரேக்கர் மிக லேட்டஸ்டாக கிளப்பியுள்ள சர்ச்சை. என்னது அஸ்வின் ஆல் டைம் கிரேட் ஆஹ் ? அஸ்வின் ஒரு சிறந்த வீரர், ஆனால் ஆல் டைம் சிறந்த வீரர் என்றெல்லாம் சொல்லாதீர்கள், அவர் இன்னும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் பேசிய விவகாரம் தீயாக பரவி வருகிறது.






கபில் தேவ் அடுத்த படியாக 400 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி, 5 சதம் அடித்த ஒரே வீரராக வலம்வருகிறார் அஸ்வின். அவரை பார்த்து இப்படி சொல்வதா என ரசிகர்கள் சஞ்சய் மன்ஞ்ரேக்கரை சமூக வலைத்தளங்களில் வறுத்து புரட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது வழக்கமான பணியில் இதற்கு ரிப்ளை அளித்துள்ள அஸ்வின் "அப்படி சொல்லாத டா சாரி மனசு எல்லாம் வலிக்கறது" என்னும் அந்நியன் திரைப்பட வசனம் அடங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.






ரசிகர்கள் அனைவரும் இதனை பகிர்ந்து சஞ்சய் மன்ஞ்ரேக்கரை ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பேசி வந்த சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 2020-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் வர்ணனை குழுவிலிருந்து கழட்டிவிட்டது பிசிசிஐ. இந்நிலையில் சில காலமாக அமைதி காத்து வந்த சஞ்சய் மீண்டும் வாயை திறந்து வாங்கி கட்டிக்கொள்ளும் தனது வழக்கத்தை தொடங்கி இருக்கிறார்.