டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். அதில் மனோஜ் சர்கார் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியை அவர் வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். 


உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் சர்கார். தனக்கு ஒரு வயது இருக்கும்போதே, போலியோ காரணமாக கணுக்கால் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்து கொண்டே, தனது ஐந்து வயதில் இருந்து பேட்மிண்டன் பயிற்சியை தொடங்கியுள்ளார் மனோஜ். மாற்றுத்திறனாளி அல்லாதவர் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்றும் தனது திறமை நிரூபித்துள்ளார் மனோஜ்.  தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பாரா பேட்மிண்டனில் கவனம் செலுத்திய அவர், இந்தியாவின் தவிர்க்க முடியாத முக்கிய பாரா பேட்மிண்டன் வீரராக முன்னேறினார். சர்வதேச ஃபோடியம்களை அலங்கரித்தார்.






அவர் இன்று பங்கேற்ற எஸ்.எல் 3 பிரிவில் உலக தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்பது அவரது கனவாக இருந்தது. 31 வயதில் அந்த கனவு அவருக்கு நினைவேறியுள்ளது. தனது முதல் பாராலிம்பிக் தொடரிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளார் மனோஜ் சர்கார்.






ஆடவர் எஸ்.எல் 3 பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் மனோஜ் சர்கார் ஜப்பான் வீரர் ஃபூஜிஹாராவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமில் 22-20 என்ற புள்ளிக்கணக்கில் மனோஜ் கைப்பற்றினார். மிகவும் சவாலான எதிரணி வீரர் ஃபுஜிஹாரா, கடைசி வரை இந்த கேமை வென்றிட போராடினார். அடுத்த கேமை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி கேமை வென்றார்.