டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். அதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்டு 24ஆம் தேதி முதல் பாராலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்குகின்றன. இம்முறை இந்தியா சார்பில் 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் தங்கவேலு மாரியப்பன் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். இந்த முறையும், பதக்கத்தை வென்று நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 






சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனுக்கு ஐந்து வயது இருக்கும்போது ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக கால் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், முடக்கப்பட்ட காலுடன் தனது வாழ்க்கையை தொடர்ந்தார். சிறு வயதிலேயே, அவரது தந்தை குடும்பத்தை விட்டுச் செல்ல, மாரியப்பனின் அம்மா மட்டுமே குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.


ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாரியப்பன், ஆரம்பத்தில் செய்தித்தாள் விநியோகிப்பவராக தனது வாழ்வாதாரத்தை சமாளித்து வந்துள்ளார். காய்கறி விற்பனை செய்பவரான அவரது அம்மாவுக்கு, இவரால் இயன்ற உதவிகளை செய்துள்ளார். நாள்தோறும், 2-3 கிலோமீட்டர் நடந்து சென்று பேப்பர் விநியோகம் செய்து  தினம் கிடைக்கும் 200 ரூபாய் கூலியை வைத்து தனது குடும்பத்துக்கு உதவியுள்ளார்.


தனது 18 வயதில் பள்ளி உடற்கல்வி ஆசிரியரின் தூண்டுதலால், விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். உயரம் தாண்டுதலில் ஆர்வம் கொண்ட அவர், தொடர்ந்து பயிற்சி எடுத்து கொண்டார். முதலில், தேசிய அளவிலான பாரா போட்டிகளில் பங்கேற்ற அவர், மெதுவாக அந்த விளையாட்டில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். 



அவரது அயராத உழைப்பிற்கு கிடைத்த பலனாக, 2016 ரியோ ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்று 1.89 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகே, அவரது வாழ்க்கையில் மாற்றம் நிகழ்த் தொடங்கியது. வெற்றி பெற்றதால் கிடைத்த பரிசுகளை வைத்து பொருளாதார அளவில் முன்னேறத் தொடங்கினார் அவர். கூடவே, 2017-ம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 


கொரோனா காலத்தில், பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவிட்ட அவர், முடிந்த பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார். இப்போது டோக்கியோ விரைந்திருக்கும் அவர், சமீபத்தில் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது,”என்னுடைய ஒரே குறிக்கோள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பது தான். என் சிறுவயதில் நான் மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். அது என்னை பெரிதாக பாதிக்காத படி நான் பார்த்து கொண்டேன். 2011ஆம் ஆண்டு முதல் விளையாட்டில் பெருமை சேர்த்து வருகிறேன். ரியோ பாராலிம்பிக் போட்டிகளை போல் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். பாராலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. ஆகவே இம்முறை நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” எனக் கூறினார். 


வாழ்த்துகள் மாரியப்பன்!


Also Read: சென்னைக்கு எல்லோருமே ஒன்னுதான்... எல்லோருக்கும் சென்னை ஒன்னுதான்! ஹாப்பி பர்த்டே சென்னை!