2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பவானி தேவி, நேத்ரா குமணன், கே.சி கணபதி, வருண் தக்கர், இளவேனில், சரத் கமல், சத்யன் ஞானசேகரன் போன்ற வீரர் வீராங்கனைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள், ஒலிம்பிக் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றனர். கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ரேவதி வீரமணி, தனலெட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்கள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒலிம்பிக் செல்ல இருக்கும் தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “டோக்கியோவில் இந்தியா சார்பாகக் களம் கண்டு நமக்குப் பெருமை சேர்க்கவிருக்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் இன்று உரையாடினேன். வெற்றி நமதாகட்டும் என்று வீரர்கள் வெற்றிவாகை சூடி, பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தி மகிழ்ந்தேன். தேவைப்படும் உதவிகளுக்கும் உத்தரவாதம் அளித்தேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு ஊக்கத் தொகை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் ஜப்பான் டோக்கியோவில் 23-7-2021 முதல் 8-8 2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி மற்றும் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்புப் பிரிவில் சுபா வெங்கடேசன், தனலஷ்மி சேகர் மற்றும் ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 5 லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வீரர்களில் எஸ். ஆரோக்கிய ராஜீவ் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், சுபா வெங்கடேசன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவார்கள்.