2020ல் கைவிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் தொடர், இந்தாண்டு நடைபெற இன்னும் 3 மாத காலத்திற்கும் குறைவாகவே உள்ளது, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் டோக்கியோவின் முன்னணி மருத்துவ அமைப்பு ஒன்று ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யுங்கள் என அந்நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள டோக்கியோ நகரில் உள்ள "மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன, இதில் கூடுதலாக நோயாளிகள் வந்தால் படுக்கைகள் கூட இல்லை" என டோக்கியோ மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது, இந்த சங்கத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ''எங்களது அழுத்தமான கோரிக்கையை நிர்வாகிகள் மத்தியில் வைக்கிறோம், தயவுசெய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இடம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சிரமம், அதனால் போட்டிகளை ரத்து செய்ய தெரிவியுங்கள்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
ஜப்பான் தலைநகரான டோக்கியோவை பொறுத்தவரை, திடீரென ஏற்பட்டுள்ள அதிகப்படியான பாதிப்பு அதே நேரம் குறைந்த அளவிலான மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ படுக்கைகள் ஆகிய காரணங்களால் மூன்றாவது அவசர நிலையை அரசு அறிவித்துள்ளது. இதன் படி பார்கள், கரோக்கி பார்லர், கேளிக்கைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் பெரிய வணிக நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விரைவில் ஜப்பானில் கோடை காலம் வர இருப்பதால் வெப்ப பாதிப்புக்களையும் சந்திக்க நேரிடும், அப்போது அதற்கான மருத்துவத்தை வழங்க வேண்டிய கட்டாயமும் மருத்துவர்களுக்கு ஏற்படும். இப்படி இருக்க "ஒலிம்பிக் நடப்பதால் உயிரிழப்புகள் அதிகரித்தால் - ஜப்பான் அதற்கான பொறுப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படும்" என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே இணைய வழியாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒலிம்பிக் போட்டியை ரத்துசெய்ய வேண்டும் என்ற குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இப்படி அனைத்து திசைகளில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தாலும், ஜப்பான் பிரதமர் ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானில் நடத்தி முடிக்க ஆர்வம்காட்டி வருகிறார். ஜப்பான் பிரதம மந்திரி யோஷீஹிடே சுகா "பாதுகாப்பான முறையில் அனைத்து விதமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டியை நடத்தலாம்" என்கிறார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் அடுத்த சில மாதங்கள் மிக முக்கியமானது. நடைபெறும் என்ற கனவோடு உலகெங்கிலும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெளிவான முடிவை விரைவாக அறிவித்தலே சரியானதாக இருக்கும்..