இந்திய அளவில் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஐ.பி.எல். போட்டி மிகவும் பிரபலம். இந்த போட்டித்தொடரில் பல இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதைப்போலவே, தமிழக அளவில் டி.என்.பி.எல். என்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பப்பட்டு வருகிறது.


2016ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த தொடர், கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். போட்டித் தொடர் ஜூலை 19-ந் தேதி நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 5வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டி தொடங்க உள்ளது.


இந்த தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் சேலம் ஸ்பார்டன்ஸ் என்ற பெயரில் இந்த தொடரில் களமிறங்க உள்ளது.




முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கோவை கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடிவரும் ஷாரூக்கான் கேப்டனாக உள்ளார். சேலம் அணியை டேரில் பெராரியோ வழிநடத்த உள்ளார். சேலம் அணியில் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய விஜய் சங்கர் விளையாட உள்ளார்.  சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


இந்த தொடரில் வழக்கமாக விளையாடி வரும் பிரதான வீரர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்கிலாந்து தொடரில் ஆடி வருவதால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக ஓய்வில் உள்ள இந்திய அணியில் விளையாடிய டி.நடராஜன் பங்கேற்கவில்லை. மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக முரளி விஜய் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். வர்ணணையாளராக தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் உள்ளதால் அவரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.


இந்த தொடரின் பிரதான வீரர்கள் யாரும் விளையாடததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் ஆடிய ஷாரூக்கான், ஜெகதீசன், கவுசிக்காந்தி, முருகன் அஸ்வின், பெரியசாமி, பாபா அபராஜித், பாபா இந்திரஜித் ஆகியோருடன் இந்திய அணிக்காக ஆடிய அனுபவம் உள்ள விஜய் சங்கர் விளையாடுவதால் அவர்களின் ஆட்டங்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.  லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இன்று தொடங்கும் இந்த போட்டித்தொடருக்கான குவாலிபையர் போட்டி ஆகஸ்ட் 10-ந் தேதியும், எலிமினேசன் போட்டி 11-ந் தேதியும், இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் போட்டி ஆகஸ்ட் 13-ந் தேதியும், இறுதிப்போட்டி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதியும் நடைபெற உள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போட்டித்தொடர் முழுவதும் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.