நெதர்லாந்து நாட்டில் 2022ம் ஆண்டுக்கான லிபெமா ஓபன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் மெட்ததேவ் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆடவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதற்கான இறுதிப்போட்டி நேற்று ஹெர்டோகென்போஸ்ச்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வதேவுடன் தரவரிசையில் 205ம் இடத்தில் உள்ள நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வீரர் வான் ரிஜிதோவன் மோதினர். இந்த போட்டியில் எளிதில் மெட்வதேவ் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது.
இந்த போட்டியில் 25 வயதான வான் ரிஜிதோவன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். மெட்வதேவ் மிகவும் தடுமாறினார். இதனால் வான் ரிஜிதோவன் 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் மிகவும் எளிதாக வெற்றி பெற்றார். மெட்ததேவ் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். 65 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி வான் ரிஜிதோவன் தன்னுடைய முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
இந்த 2022ம் ஆண்டில் மெட்வதேவ் இதுவரை எந்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றவில்லை. இந்த வெற்றி மூலம் 205வது இடத்தில் இருந்த வான் ரிஜிதோவன் 99 இடங்கள் கிடுகிடுவென முன்னேறி 106வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றி பெற்ற வான்ரிஜிதோவனுக்கு டென்னிஸ் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
லிபெமா டென்னிஸ் தொடருக்கான மகளிர் சாம்பியன் பட்டத்தை ஏகாடெரினா அலெக்ஸாண்ட்ராவோ கைப்பற்றினார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை நீல் மற்றும் வெஸ்லியும், மகளிர்களுக்கான இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை எலன் மற்றும் தாமரா ஆகிய இருவரும் கைப்பற்றி அசத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்