ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 45 வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுத்திக்கு தகுதி பெற்ற இந்திய அணி லீக் சுற்றுலேயே வெளியேறிய நெதர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றால் தோல்வியே பெறாமல் சாம்பியன் பட்டத்தை பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும். முன்னதாக, இதுவரை அந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றனர். இச்சூழலில் இந்திய அணி இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஒரு சாதனை படைத்திருக்கிறது. அது என்னவென்றால், உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய டாப் 5 பேட்டர்களும் 50 ரன்களுக்கு மேல் அடித்ததுதான்.
ரோகித்- சுப்மன்:
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இதில் 54 பந்துகள் ரோகித் சர்மா களத்தில் நின்று தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 பவுண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் பறக்க விட்டா அவர் 62 ரன்களை குவித்தார். பின்னர், நெதர்லாந்து பந்து வீச்சாளர் பாஸ் டி லீடே வீசிய பந்தில் வெஸ்லி பாரேசியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார்.
முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடரில் 120+ என்ற ஸ்டைரைக் ரேட்டுடன் 500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மறுபுறம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார் சுப்மன் கில். அதன்படி 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இவ்வாறாக மொத்தாம் 51 ரன்கள் எடுத்த அவர் பால் வான் மீகெரென் வீசிய பந்தில் தேஜா நிடமானுருவிடம் கேட்ச் கொடுத்தார்.
விராட்- ஸ்ரேயாஸ்- ராகுல்:
அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அதன்படி, விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் 7 வது முறையாக 50 ரன்களை கடந்த வீரராக உள்ளார். மொத்தம் 56 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதேபோல், ஸ்ரேயாஸும் சிறப்பாக விளையாடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என மொத்தம் 94 பந்துகளில் 128 ரன்களை குவித்தார். மறுபுறம் கே.எல்.ராகுல் 64 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 102 ரன்களை குவித்தார். இவ்வாறாக இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 என்ற மெகா இலக்கை நெதர்லாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.