மார்ட்டினா நவ்ரடிலோவாவிற்கு புற்றுநோய் பாதிப்பு:


அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான மார்ட்டினா நவ்ரடிலோவா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 66 வயதான அவருக்கு தொண்டை மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அவரது தரப்பிலான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த மாத இறுதியில் சிகிச்சையை தொடங்க உள்ளேன். ஆரம்ப கால சிகிச்சை நன்றாக உள்ளது. பெரும் தீவிரத்துடன் இரண்டு புற்றுநோய்களும் தொடக்க கட்டத்தில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மார்ட்டினா நம்பிக்கை:


இந்த இரட்டை புற்றுநோயானது  தீவிரமானதாக உள்ளது. ஆனால், இன்னும் சரிசெய்யக்கூடிய நிலையில் தான் உள்ளன. இதுதொடர்பான போராட்டத்தில் சாதகமான முடிவை நான் எதிர்பார்க்கிறேன். சிறிது காலத்திற்கு இது கடினமானதாக இருந்தாலும், புற்றுநோய்க்கு எதிராக முழுமையாக போராட உள்ளதாகவும் மார்ட்டினா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






59 பட்டங்களை வென்ற மார்ட்டினா:


66 வயதான இவர் செக் குடியரசில் பிறந்து, 1975ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.1970 மற்றும் 80 களில் டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனையாக விளங்கிய மார்ட்டினா, தனிநபர், இரட்டையர் மற்றும் கலப்பு பிரிவு என அனைத்திலும் சேர்த்து 59 முக்கிய தொடர்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.


இரண்டாவது முறையாக புற்றுநோய் பாதிப்பு:


ஆகச்சிறந்த டென்னிஸ் வீராங்கானையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மார்ட்டினா, கடந்த 2010ம் ஆண்டு தனது 53வது வயதில் ஏற்கனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு, ரேடியேஷன் தெரபி சிகிச்சை மேற்கொண்ட பின் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.


பரிசோதானையில் அதிர்ச்சி தகவல்:


தொடர்ந்து டென்னிஸ் வர்ணனையாளராக பணியாற்றி வந்த மார்ட்டினா, அண்மையில் தனது கழுத்தில் நிணநீர் முனை பெரிதாகி இருப்பதை உணர்ந்தார். இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு மார்பக புற்றுநோய், நிலை ஒன்றில் இருப்பது கண்டறியப்பட்டது. அதுதொடர்பான மற்ற பரிசோதனைகளை மேற்கொண்டபோது தான், மார்ட்டினாவிற்கு தொண்டை புற்றுநோயும் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனிடையே, இந்த புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்தக்கூடிய மனித பாப்பிலோமா வைரஸை வைத்து மார்ட்டினாவிற்கு சிகிச்சை அளிக்க உள்ளதாகவும், இதன் மூலம் அவர் முழுமையாக புற்றுநோயிலிருந்து மீண்டு வருவார் என்றும் மருத்துவரகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.