வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நாளை மறு நாள் செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.


யாருக்கு வாய்ப்பு?


இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் 2-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும். இதனால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளதால் அணியின் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.


ஏற்கனவே இடது கை சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா இருப்பதால் மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேலுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் களம் இறங்கலாம். மார்ச் 2024 இல் தரம்ஷாலாவில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிதான் குல்தீப்பின் கடைசி டெஸ்ட். குல்தீப் களம் இறங்கும் பட்சத்தில் ஆகாஷ் தீப் அல்லது முகமது சிராஜ் இருவரும் வெளியேற வேண்டியிருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.


இரண்டாவது டெஸ்டின் உத்தேச வீரர்கள்:


ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்/முகமது சிராஜ், குல்தீப் யாதவ்