நாட்டின் 25வது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயதே ஆன சவிதா ஸ்ரீ பெற்றுள்ளார்.


இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர்:


இந்தியாவில் நடைபெற்று வரும் அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஸ்வீடனின் எரிக் ஹெட்மேன் உடன் சவிதா ஸ்ரீ மோதினார்.  நேர்த்தியான காய் நகர்த்தலின் மூலம் எரிக் ஹெட்மேனை வீழ்த்தி, இந்தியாவின் 25வது பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை சவிதா ஸ்ரீ  பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், தற்போதைய நிலையில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கியுள்ளார். 2007ம் ஆண்டு பிறந்த சவிதாவின் வயது தற்போது வெறும் 16 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்திற்கு பெருமை:


முன்னதாக தமிழக செஸ் வீராங்கனை ரஷிதா ரவி இந்தியாவின் 24வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். அதைதொடந்து, சவிதா ஸ்ரீ தற்போது 25வது கிராண்ட்மாஸ்டராக பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பெண் வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர்களாக உருவாகி மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர்.


சென்னை சேர்ந்த சவிதா ஸ்ரீ:


தமிழ்நாட்டின்  சென்னையில் கடந்த  2007ம் ஆண்டு சவிதா ஸ்ரீ பிறந்தார். 16 வயதான இவர், செஸ் போட்டிகளில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று கவனம் ஈர்த்தார்.


கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எப்படி?


சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 30 போட்டிகளுக்குள் 2,500 புள்ளிகளை கடந்து, கிராண்ட்  மாஸ்டர் பட்டம் வென்ற 3 வீரர்களோடு,  தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் கவுரவம் வழங்கப்படும். அந்த வகையில் உலகம் முழுவதும் ஏராளமானோர் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 25 பேர் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளனர்.


கிராண்ட் மாஸ்டரான சவிதாஸ்ரீ:


அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு  டிசம்பரில் ஆசிய ஜூனியர் கேர்ள்ஸ் போட்டியில் வென்றதன் மூலம் சவிதா ஸ்ரீ கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான முதல் வெற்றியை பெற்றார். கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான இரண்டாவது வெற்றியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் செக் ஓபன் பர்டுபிஸில் பதிவு செய்ததோடு, 2300 புள்ளிகளையும் கடந்தார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்வீடனின் எரிக் ஹெட்மேனை வீழ்த்தியதன் மூலம், சவிதா ஸ்ரீ இந்தியாவின் 25வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். ஃபாகர்னெஸ் GM ஓபன் 2023 இன் இறுதிச் சுற்றை சமன் செய்தால், சர்வதேச மாஸ்டர் எனும் அங்கீகாரத்தை சவிதா ஸ்ரீ பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சவிதா ஸ்ரீ-க்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.