டெல்லியில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 23வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டேவிட் வார்னர் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கும் என்று கூறினார். இதன்படி, ஹைதராபாத் அணியின் ஆட்டத்தை வார்னரும், பார்ஸ்டோவும் தொடங்கினர்.


பார்ஸ்டோ 5 பந்துகளில் 7 ரன்களை எடுத்த நிலையில், சாம் கர்ரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மனிஷ் பாண்டே களமிறங்கினார். வார்னர் – பாண்டே ஜோடி நல்ல ரன் ரேட்டில் ஆட்டத்தை கொண்டு சென்றனர். ஒருபுறம் வார்னர் நிதானமாக ஆட, மனிஷ்பாண்டே அதிரடியாக ஆடினார்.




இந்த நிலையில், 17.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர்128 ஆக இருந்த நிலையில் வார்னர் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய வில்லியம்சனும், பாண்டேவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மனிஷ்பாண்டே 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாடி, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான கேதர் ஜாதவ் களமறிங்கினார். தன் மேலான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 4 பந்துகளை சந்தித்த கேதர் ஜாதவ், 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 12 ரன்களை குவித்தார். மறுமுனையில் வில்லியம்சன் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களை குவித்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. தற்போது இலக்கை நோக்கி ஆடிவரும் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 10.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்களை எடுத்துள்ளது.