73வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. பஞ்சாபில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி, இந்தியன் ரயில்வே அணியை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கினர்.
லூதியானாவில் உள்ள குருநானக் தேவ் உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 73வது தேசிய கூடைப்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி- தமிழ்நாடு ஆடவர் அணியும், பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ரயில்வே மகளிர் அணி - கேரளா பெண்கள் அணியும் மோதியது. இதில், மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இந்தியன் ரயில்வேஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆண்கள் பிரிவில் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த தமிழ்நாடு ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
கலக்கிய தமிழ்நாடு ஆடவர் அணி:
கடந்த ஆண்டு உதய்பூரில் நடந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த தமிழக ஆடவர்கள், நேற்று நடந்த அரையிறுதியில் கடந்த ஆண்டு வெற்றியாளர்களான பஞ்சாபை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு ஆடவர் அணி 72-67 என்ற புள்ளிக்கணக்கில் கடுமையாக போராடி வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.
தமிழ்நாடு அணி சார்பில் பால்தனேஸ்வர் 17 புள்ளிகள் பெற்றுகொடுத்து வெற்றியை தன்வசமாக்கினார். மேலும், , பிரணவ் பிரின்ஸ், ஜீவந்தன் தலா 11 புள்ளிகளும், அரவிந்த் 10 புள்ளிகளையும் பெற்றனர். பஞ்சாப் அணி சார்பில் பால்ப்ரீத் சிங் அதிகபட்சமாக 23 புள்ளிகளையும், கல்யாண் மற்றும் மாணிக் ஆகியோர் தலா 13 புள்ளிகளையும் பெற்றனர்.
பெண்கள் இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் ரயில்வே அணி - கேரளா மகளிர் அணியை 80-50 என்ற கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றது. இந்திய மகளிர் அணி சார்பில் பூனம் சதுர்வேதி 23 புள்ளிகளையும், புஷ்பா செந்தில் குமார் மற்றும் குலாப்ஷா அலி முறையே 15 மற்றும் 11 புள்ளிகளையும் பெற்றனர். கேரளா அணியில் அனீஷா கிளீடஸ் (15), சூசன் டிலோரன்டீனா (10), ஸ்ரீகலா (10) ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
மூன்றாவது இடத்துக்கான ஆட்டங்களில், தமிழக பெண்கள் 65-54 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடகாவையும், ஆண்கள் பிரிவில், பஞ்சாப் 71-65 என்ற புள்ளி கணக்கில் டெல்லியையும் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இரு பிரிவிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.5 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. வெண்கலப் பதக்கம் வென்ற அணிகள் ரூ.2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முறையே தமிழகத்தைச் சேர்ந்த பல்தனேஸ்வர் மற்றும் இந்திய ரயில்வேயின் பூனம் சதுர்வேதி ஆகியோர் மதிப்புமிக்க வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் கார்கள் வழங்கப்பட்டன.
பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி அர்பித் சுக்லா கலந்து கொண்டார். இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பஞ்சாப் கூடைப்பந்து சங்க தலைவர் ராஜ்தீப் சிங் கில் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.