16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது டி20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வமாக இருந்தது. அதன் அடிப்படையில் கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி ஜூன் மாதம் தொடக்கத்தில் பிசிசிஐ தரப்பிலிருந்து ஐசிசியிடம்  வேண்டுகோள் வைக்கப்படுவதாக இருந்தது. 






இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி  இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, துபாய், ஷார்ஜா, அபு தாபி, மஸ்கட் ஆகிய இடங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “டி-20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்த முழுமையாக முயற்சித்தோம். ஆனால், கொரோன பரவல் காரணமாக அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, டி-20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடத்த முடிவு செய்துள்ளோம். எனினும், ரசிகர்கள் மறக்க முடியாத வகையில் இத்தொடரை சிறப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என பிசிசிஐ செயலாளர் ஜே ஷா தெரிவித்துள்ளார்.


முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க வாய்ப்பிருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. 






இப்போது டி-20 உலகக்கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் வெளியாகி உள்ளதால், ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கான தேதிகளில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.