சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று முதல் அனைத்து மத வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்யத்தொடங்கினர்.
தமிழ்நாடு அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. மூன்று வகை மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், மூன்றாவது வகை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை. இன்று காலை முதல் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான வழிபாட்டு தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தினசரி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று மற்றும் தொடர்ச்சியான ஊரடங்கால் அவதியுற்ற சென்னை வாசிகளுக்கு வழிபாட்டு தலங்கள் மீண்டும் புத்துணர்ச்சியை அளிப்பதாய் உள்ளது.
சுத்திகரிப்பான்களால் தூய்மைப்படுத்துவது; சமூக விலகியிருத்தல்; ஆகியவை உட்பட, கோவிட் 19 நோய் பரவாமல் தடுப்பதற்கு பின்பற்றப்பட வேண்டியவை குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்தனர்.
கோயிலுக்கும் முகக்கவசம், சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா நடத்தைமுறைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும். நோய்த் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் ஆபத்து வாய்ப்புள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பிற இணை நோய் கொண்ட நோயாளிகள் வழபாட்டு தலங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை முகாமை எழும்பூர் லஷ்மி மஹாலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
மேலும், சென்னை மற்றும் இதர நான்கு மாவட்டங்களில் இன்று முதல் வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும். திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
முன்னதாக, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (Archaeological Survey of India - ASI) அமைப்பின் கீழ் மையப் பாதுகாப்பில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் திறக்க மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் முன்னதாக அனுமதி அளித்தது. அதன்படி, இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் மையப் பாதுகாப்பில் உள்ள, 3691 நினைவிடங்களில், வழிபாட்டுத்தலங்கள் கொண்ட 820 நினைவிடங்கள் ஜூன் 16ம் தேதி முதல் திறக்கப்பட்டன.