2021 டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஞாயிற்றுகிழமை நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 18வது ஓவரின் கடைசி பந்திலே எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக, 18 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது 18வது ஓவரை வீசிய முகமது ஷமி வீசிய முதல் 5 பந்திலே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று போட்டியை முடித்தது. 


இதனால், இந்த தோல்விக்கு காரணம் முகமது ஷமிதான் என்று சமூக வலைதளங்களில் அவர்மீது வெறுப்பான கருத்துகள் வீசிப்பட்டது. குறிப்பாக, சிலர் அவரது மதத்தை குறிப்பிட்டு கண்டனத்துக்குரிய வகையில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஷமி மீதான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தும், ஷமிக்கு ஆதரவு தெரிவித்தும் கிரிக்கெட் வட்டாரத்தை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர். 






ஷமிக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “இதற்கு முன்பு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் நானும் விளையாடி இருக்கிறேன். அந்த போட்டிகளில் இந்தியா தோற்றபோதும், யாரும் என்னை பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என சொல்லவில்லை. அந்த காலம் வேறு, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியா அது. இப்போது நடந்து கொண்டிருக்கும் அநியாயம் விரைவில் நிற்க வேண்டும்” என காட்டமாக பதிவிட்டிருந்தார்.







இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் கோலி, “பாகிஸ்தான் அணியின் ஆட்டம் எங்களை விஞ்சி இருந்தது. அதனால்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான் இதை ஒப்புக் கொள்கிறேன். இப்போதுதான் டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் பயணம் முடிந்துவிட போவதில்லை. இந்திய கிரிக்கெட் அணி எந்த அணியையும் சாதாரணமாக எண்ணிவிடாது. நாங்கள் எதிர்த்து போட்டியிடும் ஒவ்வொரு அணியும் எங்களுக்கு முக்கியமான அணிதான். இதில் பாகுபாடு ஏதுமில்லை. நாங்கள் கிரிக்கெட்டை மதிக்கின்றோம், கிரிக்கெட்டை நேசிக்கின்றோம்” என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், அணியின் தோல்விக்கு ஒருவரை மட்டும் சுட்டிக்காட்டுவது சரியானதல்ல என்றும், குறிப்பாக மதத்தை சுட்டி பேசுவது கண்டனத்திற்கு உரியது எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண