விழுப்புரம் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கடந்த 1949 ஆம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகு பெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும், ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம் தவிழ்ந்தபுத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். 



அதே போல் அணைக்கட்டின் இடது புறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும், கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம்பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். மேலும் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் நகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அணைக்கட்டின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அணைக்கட்டு சிமெண்ட் தளத்துக்கு அடிப்பகுதியின் வழியாக வெளியேறியது.




தொடர்ந்து தண்ணீர் வெளியேறினால், அணைக்கட்டின் சிமெண்ட் தளங்கள் உடைந்து போகும் அபாய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் வந்த தண்ணீரை தற்காலிகமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடதுபுறம் உள்ள மதகுகளின் வழியாக திருப்பி விட்டனர்.  இதன் பின்னர், உடைப்பு ஏற்பட்ட இடத்தை சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொண்டனர். இதற்கிடையே சாத்தனூர் அணைக்கட்டில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சிமெண்ட் தளங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. அதோடு அணைக்கட்டின் வலது மற்றும் இடது பகுதியில் உள்ள ஷட்டர்களும் பலம் இழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே தற்போது தண்ணீர் எதுவும் தேக்கி வைக்காமல் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் என வரும் தண்ணீர் அணைக்கட்டை மூழ்கடித்து சீறிபாய்ந்து செல்கிறது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், அதிகாரிகள் அலட்சிய போக்கினால் இந்த தடுப்பணை தற்போது உடையும் நிலைக்கு சென்றுவிட்டது.  




இதனால் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை சார்பில் இந்த அணைக்கட்டை சீரமைத்து வந்து இருந்தால், இன்று இந்த நிலைமை வந்து இருக்காது. இப்பகுதியில் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டதன் காரணமாக, தான் அணைக்கட்டு பலம் இழந்து இந்த நிலைக்கு சென்றுவிட்டது. பருவமழை தீவிரம் அடையும் நிலையில் முழுவதுமாக தண்ணீரை தேக்க முடியாமல் போய்விடும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர