உலககோப்பை போட்டிக்கான சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான தகுதிப்போட்டிகள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இதன்படி, குரூப் பி பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஓமனும், பப்புவா நியூ கினியா அணிகளும் நேருக்கு நேர் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. பிலால் கான் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலே தொடக்க வீரர் டோனி உரா ரன் ஏதுமின்றி போல்டானார். கலிமுல்லா வீசிய அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் லேகா சியகாவும் போல்டானார். ரன் கணக்கைத் தொடங்கும் முன்னரே இரண்டு விக்கெட்டுகளை இழந்தத பப்புவா நியூ கினியாவை கேப்டன் ஆசாத்வலாவும், சார்லஸ் அமினியும் இணைந்து மீட்டனர்.
குறிப்பாக கேப்டன் ஆசாத்வலா பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 81 ரன்களை குவித்தனர். 26 பந்தில் 37வது ரன்களை எடுத்திருந்த சார்லஸ் அமினி ரன் அவுட்டானார். அவர் அவுட்டான சிறிது நேரத்தில் கேப்டன் ஆசாத் வாலா 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 56 ரன்களுடன் கலீமுல்லா பந்தில் ஜதிந்தீர் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, சசிபா 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், பப்புவா நியூ கினியா வீரர்கள் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர்கள் அகிப் இலியாசும், ஜதிந்தர்சிங்கும் ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடியாக ஆடினர். குறிப்பாக ஜதிந்தர் சிங் மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார்.
இவர்கள் இருவரையும் பிரிக்க ஏழு பந்துவீச்சாளர்களை எதிரணி கேப்டன் ஆசாத்வாலா பயன்படுத்தினார். ஆனால், எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியில் 130 ரன்கள் என்ற இலக்கை 13.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து ஓமன் அணி அபார வெற்றி பெற்றது. ஜதிந்தர் சிங் 43 பந்தில் 4 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடனும் 73 ரன்களுடனும், அகிப் இலியாஸ் 43 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக பந்துவீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜூசன் மக்சூத்திற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மேலும், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓமன் அணி அரிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. டி20 உலககோப்பையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்திய மூன்றாவது அணி என்ற பெருமையை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2007ம் ஆண்டு இலங்கை நிர்ணயித்த102 ரன்களை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியாவும், 2012ம் ஆண்டு ஜிம்பாப்வே நிர்ணயித்த 94 ரன்களை விக்கெட் இழப்பின்றி தென்னாப்பிரிக்க அணியும் எட்டிப்படித்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது ஓமன் அணியும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்