சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு அணி நிர்வாகத்தை சபாஷ் போட வைத்திருக்கிறார் சூர்ய குமார் யாதவ். 30 வயதைக் கடந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது கடினம் என்கிற நடைமுறை யதார்த்தத்தையும் தன்னுடைய பேட்டிங் மூலம் தகர்த்து எறிந்துள்ளார் அவர். ரோஹித்தின் வலதுகரம் என்பதாலேயே சூர்ய குமார் யாதவை சர்வதேச போட்டிகளில் இடம்பெற விடாமல் கோலி ஓரங்கட்டுகிறார் என்கிற சர்ச்சைக்கும் இதன்மூலம் ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. 


பொறுமை இல்லாத 90'ஸ் கிட்


திறமை இருந்தும் கூட நிறைய இளைஞர்கள் தங்களுடைய துறைகளில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் போராடுவது என்பது இந்தியாவில் தொடர்ந்து கொண்டு இருக்கும் ஒரு அவலம். ஆனால் சூர்ய குமார் யாதவோ ஆரம்பத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பொறுப்பில்லாமல் வீணடித்தவர். சூர்ய குமாரின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக 24 வயதிலேயே பாரம்பரியமிக்க மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. ஆனால் தன்னுடைய பொறுப்பை உணராமல் சக வீரர்களுடன் சண்டை இழுத்து அவப் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் தான் சூர்ய குமார் யாதவ்.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதால் ஆட்டத்தில் கவனம் இழந்த அவர் உள்ளூர் போட்டிகளில் தான் அடிக்கும் 40, 50 ரன்களை சதங்களாக மாற்ற முடியாமல் தவித்து வந்தார். இந்த நேரத்தில் தான் மும்பையை சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் தேசிய அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினர். 




ஐ.பி.எல். ஹீரோ மிஸ்டர் 360°


உள்ளூர் போட்டிகள் பெரிய அளவுக்கு கை கொடுக்காவிட்டாலும் ஐ.பி.எல். போட்டிகளில் தன் முத்திரையை பதிக்க சூர்யகுமார் யாதவ் தவறவில்லை. 2012 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை முழுமையாக பெறாததால் 2014 -ல் நடந்த ஏலத்தில் கழற்றி விடப்பட்டார். சூர்யகுமார் மீது நம்பிக்கை வைத்து அவரை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  ஆட்டத்தை முடித்து வைக்கும் பிரதானமான ரோலான பினிஷர் ரோலை சூர்ய குமாருக்கு வழங்கியது. பின்னர் 2018- ம் ஆண்டு  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி பின் சூர்யகுமார் யாதவ் தொட்டதெல்லாம் பொன்னாக மாறத் தொடங்கியது.


ரோஹித் அன்பு;  கோலி வம்பு


மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமாருக்கு Anchor ரோலே பிரதானம் என்றாலும், சில போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கியும் தன் முத்திரையை பதித்துள்ளார். ரோஹித் ஷர்மாவின் வழிகாட்டுதலில் தேவையற்ற கோபத்தை கைவிட்டு  ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தும் பாடத்தை கற்றுத் தேர்ந்துள்ளார் அவர். கடந்த ஐ.பி.எல். தொடரின் போது விராட் கோலியின் சீண்டல்களை பொறுத்துக் கொண்டு ஆட்டத்தை வெற்றிகரமாக அவர் முடித்துக் கொடுத்த விதம் இதற்கு சாட்சி. இன்னொரு புறம் டி20 பவர் ஹிட்டிங்கின் தேவைக்கு ஏற்ப  தன்னுடைய உடல்தகுதியையும் அவர் மேம்படுத்திக் கொண்டுள்ளார். மும்பை பாணி கிளாசிக்கல் பேட்ஸ்மேனான சூர்ய குமார் யாதவின் பேட்டிங்கில் இது ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது.  ஆடுகளத்தில் சகல பக்கங்களிலும் பந்தை விரட்டி அடிக்கும் Mr. 360° சூப்பர் மேனாக இன்று உருவெடுத்திருக்கிறார் சூர்யகுமார். 




விட்டுக் கொடுத்த விராட் கோலி


உள்ளூர், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து சாதித்து தேசிய அணி வாய்ப்பு கிடைக்காதது குறித்து சூர்யகுமார் யாதவ் கவலைப்படவில்லை. நம்பிக்கையோடு காத்திருந்தவருக்கு  இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ஐ.பி.எல். தொடரில் சூர்யகுமாரை வம்புக்கு இழுத்த கோலி, இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமாருக்கு கைகொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சூர்ய குமாருக்காக தன்னுடைய ஆஸ்தான இடமான எண் 3ஐ அவர் விட்டுக் கொடுத்தார். நீண்ட நாள் பசியோடு காத்திருந்த சூர்ய குமார், தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தன் மீதான எதிர்பார்ப்புகளை நியாயப்படுத்தினார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் அவருடைய பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.


அடுத்த மைக் ஹஸ்ஸி?


கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் ஆட்டத்தை முடித்து வைக்கும் ஒரு பினிஷர் இல்லாமல்  இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இன்னும் தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக வேகப்பந்து வீச்சை சமாளித்து ஆடுவதில் அவருக்கு நிறைய சிரமங்கள் இருக்கின்றன. வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டையும் சரளமாக எதிர்கொண்டு அடித்து ஆடும் சூர்ய குமார் யாதவ் தற்போது ஐயருக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார்.  360° பேட்டிங்கும் சூர்யகுமாருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்து சாதிக்கும் பட்சத்தில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களிலும் அவர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.  மைக் ஹசி போன்ற ஒருசிலர் மட்டுமே 30 வயதைக் கடந்த பின்னும் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் சூர்யகுமாரும் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.