இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா அணி, 3 ஒரு நாள், 3 டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் தொடங்கிய ஒரு நாள் தொடரில், மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 


கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அணியின் ஸ்கோர் 200-ஐ தாண்ட திணறியது. தனஜெய் டி சில்வா, சரித் அஸ்லாங்கா மட்டும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால், 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. 


ஏற்கனவே, முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்ரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்ததால், கடைசி போட்டியில் வெற்றி பெற்று யார் தொடரைக் கைப்பற்ற போவது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 






எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு, இலங்கை பந்துவீச்சாளர்கள் சவாலாக பந்துவீசினர். ஒவ்வொரு 10 ரன்களுக்கும் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்த தென்னாப்ரிக்கா அணிக்கு, 100 ரன்களை எட்டுவதற்குள் 8 விக்கெட்டுகள் சரிந்திருந்தது. 


மஹீஷ் தீக்‌ஷனா: 10-0-37-4






இலங்கனை அணி பந்துவீச்சாளர், 21 வயதேயான மஹீஷ் தீக்‌ஷனாவுக்கு இது அறிமுக போட்டி. இந்த போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் அவர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்ரிக்க அணி, 30 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 78 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற இலங்கை அணி, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அடுத்து இரு அணிகளும், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.