கிரிக்கெட் உலகில் பந்தை ஒருவர் மாயஜாலம் செய்தவர் என்றால் அது இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன். இவரைப் பற்றி முன்னாள் இந்திய கேப்டன் அசாரூதின், "கண்ணாடியில் கூட கிரிக்கெட் பந்தை சுழல் செய்யும் வித்தை காரர் முரளிதரன்" எனப் புகழ்ந்து கூறியுள்ளார். அந்த அளவிற்கு தனது சுழற்பந்துவீச்சு மூலம் எதிரணியின் பேட்ஸ்மேன்களை முரளிதரன் திணறடிக்க கூடியவர். இலங்கை கிரிக்கெட் அணிக்காக இவர் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டையும், 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 534 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தனது ஓய்விற்கு பிறகு பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அவர் ஈடுபட்டு வருகிறார். 


இந்நிலையில் தற்போது அவர் ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்திற்கு ஒரு வீடியோ நேர்காணலை அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாகவும், தனக்கு எதிராக விளையாடிய பேட்ஸ்மேன்கள் தொடர்பாக பேசியுள்ளார். அதன்படி, "சர்வதேச கிரிக்கெட்டில் நான் பந்துவீச பயந்தது இரண்டு பேட்ஸ்மேன்களுக்கு தான். ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா. மற்றொருவர் இந்தியாவின்  சேவாக். இவர்கள் இருவரும் என்னுடைய பந்தை மிகவும் எளிதாக எதிர்கொள்வார்கள். லாரா தன்னுடைய பேட்டிங் டெக்னிக் மூலம் என்னை எளிதாக எதிர்கொண்டு பல சதங்களை அடித்தார். 




அதேபோல் சேவாக் தன்னுடைய பயமில்லா அதிரடி ஆட்டம் மூலம் என்னை எளிதாக எதிர்கொண்டார். சேவாக் மாதிரியான அதிரடி ஆட்டக்காரரிடம் விக்கெட்டை அவர்  தவறு செய்தால் மட்டுமே எடுக்க முடியும். நானாக அவருடைய விக்கெட்டை எடுப்பது கடினம். டெஸ்ட் போட்டிகளில் உணவு இடைவேளை வரை சேவாக் ஆடினால் அவர் வேகமாக 150 ரன்கள் வரை குவிக்க கூடிய வீரர். அதே ஒருநாள் முழுவதும் நின்றுவிட்டால் நிச்சயம் 300 ரன்கள் அடிக்கும் திறமை கொண்டவர். ஆகவே அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம். அவர் தொடக்கத்திலும் அதிரடி காட்டுவார், சதத்தை நெருங்கினாலும் அதிரடி காட்டுவார். அதுவே அவரின் சிறப்பு. 


இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பெரிய ஜாம்பவான் வீரர். ஆனால் பந்துவீசுவதற்கு சச்சினை விட சேவாக்தான் மிகவும் ஆபத்தான வீரர். சச்சின் பெரிதாக அதிரடியாக ஆட மாட்டார். அதனால் அவர் எளிதில் எனது பந்தில் அதிக ரன்கள் சேர்க்க மாட்டார். இதற்கு நேர்மாறாக சேவாக் விளையாடுவார். ஆகவே அவர் எனது பந்துவீச்சில் வேகமாக ரன்களை சேர்த்துவிடுவார். என்னுடைய தூஸ்ரா(Doosra) பந்தை ஆசிய இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை வீரர்களை தவிர வேறு யாரும் சரியாக கணிக்க மாட்டார்கள்.




அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்னுடைய தூஸ்ரா பந்தை சிறப்பாக கணிப்பார். சென்னை அணியில் நான் பல முறை அவருக்கு பந்துவீசியுள்ளேன். அத்துடன் அவர் என்னுடைய பந்துவீச்சில் பல முறை விக்கெட் கீப்பிங்கும் செய்துள்ளார். எனவே அவர் என்னுடைய பந்துகளை வேகமாக கணித்துவிடுவார். இதன் காரணமாக தான் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன்பாக களமிறங்கினார். ஏனென்றால், யுவராஜ் சிங் என்னுடைய பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளமாட்டார். அதற்காக தான் அவருக்கு முன்பாக தோனி வந்து ஆடினார் என்று நான் நினைக்கிறேன். மற்ற நாட்டு வீரர்கள் யாரும் என்னுடைய பந்துவீச்சை அவ்வளவு எளிதாக கணித்ததில்லை.




தற்போது இருக்கும் பேட்ஸ்மேன்களில் என்னுடைய பந்துவீச்சை விராட் கோலி சிறப்பாக எதிர்கொள்வார். அவர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஒரு நல்ல பேட்ஸ்மேன். வில்லியம்சன் ஒரளவு கணித்து ஆடுவார். அதேபோல் பாபர் அசாம் நன்றாக அடுவார் என்று நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: ஸ்டைலிஷ் தோனிக்கு பல்லெல்லாம் மின்னுது.. ”நம்ம தல” வெளியிட்ட புதிய வீடியோ