இலங்கை வங்கதேசம் இடையிலான முதல் ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி தொடங்கியிருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி வங்கதேசம் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மே 18ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் இலங்கை பந்துவீச்சாளர்கள் இசுரு உதானா, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்தா வாஸ் ஆகியோருக்கு முடிவுகள் பாசிட்டிவ் என வந்தது. இதனால் திட்டமிட்டபடி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்ற கேள்விக்குறி எழுந்தது.






இந்நிலையில் ஒட்டுமொத்த இலங்கை அணியும் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தது. சரியாக டாஸ் போடுவதற்கு 1 மணிநேரம் முன்பாக இரண்டாவது பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் இலங்கை வீரர்கள் இசுரு உதானா, சமிந்தா வாஸ் ஆகிய இருவருக்கும் முடிவுகள் நெகட்டிவ் என வந்தது. ஆனால் மற்றொரு வீரர் ஷிரான் பெர்னாண்டோவிற்கு இரண்டாவது முடிவும் பாசிட்டிவ் என வந்ததால், தற்போது அவர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் ஷிரான் பெர்னாண்டோவிற்கு நோய் தொற்று அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்து, முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.






இரண்டாவது பரிசோதனை முடிவுகள் நெகடிவ் என வந்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ்.






இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.