தஞ்சாவூர்: கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இந்த நிதியாண்டில் (2023-24) 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டியதை உறுதிப்படுத்தும் விதத்தில் நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்தது.


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்து கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இந்த நிதியாண்டில் (2023-24) 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டியதை உறுதிப்படுத்தும் விதத்தில் நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது. 


மாநகர செயலாளர் பழ.அன்புமணி தலைமையில் ஒரு குழுவாக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வேலை பெற விரும்பும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும்.


4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும், அதேபோல மென்மையான, கடினமற்ற வேலை மட்டுமே வழங்கப்பட வேண்டும், வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தின கூலியாக ரூபாய் 294 குறையாமல் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.


கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலகங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை பெருந்திளாக திரட்டி மனுக்கள் கொடுக்கப்பட்டது. 


இதில் கும்பகோணம் மாநகர தலைவர் பாரூக், பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் கும்பகோணம் ஒன்றிய தலைவர் காமாட்சி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் மகேஸ்வரி மற்றும் பாபநாசம் பொறுப்பாளர்கள் நெடுந்தெரு ராஜா, உமையாள்புரம் சரவணபாபு, வழுத்தூர் சதாசிவம் மற்றும் திருப்பனந்தாள் ஒன்றியம் ராமலிங்கம், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


கும்பகோணம் பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற இயக்கத்தின் போது சுமார் 100 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், பாபநாசம் பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்தின் போது சுமார் 40 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகளும், திருப்பனந்தாள் பிடிஓ அலுவலகத்தில் நடந்த இயக்கத்தின் போது அந்த பகுதியை சேர்ந்த 50 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில முடிவின்படி கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருப்பனந்தாள் பிடிஓ அலுவலர்களை சந்தித்தோம்.


கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நடப்பாண்டில் 100 நாள் வேலை வழங்க வேண்டும். இதை உறுதி செய்யும் விதமாக நம்பர் 6 படிவத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினோம். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைத்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.