மாநிலங்களுக்கிடையிலான தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் ஹிமா தாஸ்.


முதல் பெண் வீராங்கனை:


திங் எக்ஸ்ப்ரஸ் என்று அழைக்கப்படும் அஸ்ஸாமைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ். 2018ம் ஆண்டு ஏப்ரலில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பிரிவிலும் 400 மீட்டர் குழு ஓட்டப்போட்டியிலும் கலந்துகொண்டார். ஜூலை 2018ல் ஃபின்லாந்தில் நடைபெற்ற வேர்ல்ட் அண்டர்20 சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட ஹிமாதாஸ் 51.46 நொடிகளில் ஓடி முடித்து சர்வதேச ஓட்டப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற பெயரைப் பெற்றார் ஹிமா தாஸ். அதன்பிறகு 2018 ஆசியப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்போட்டியின் இறுதியில் 51 நொடிகளில் கடந்து வெற்றிபெற்றார்.


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் டிஎஸ்பியாக அவர் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் போட்டிகளில் கலந்துகொள்ளாத நிலையில், இந்த ஆண்டு நூறு மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.




ஹிமாதாஸ் சாதனை:


மாநிலங்களுக்கு இடையிலான 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேறு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய ஹிமா தாஸ் 11.43 நொடிகளில் இலக்கை எட்டி வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசா வீராங்கனையான டூட்டி சந்த் 11.44 நொடிகளில் ஓடி மயிரிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். 11.53 நொடிகளில் கடந்து சர்பானி நந்தா 3வது இடத்தை பிடித்தார். தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட அர்ச்சனா 7வது இடத்தைப் பிடித்தார்.


இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு வீரர்:


ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீரர் அம்லான் போர்கோஹைன் (10.47 வினாடி) முதலிடத்தை பிடித்து அசத்தினார். தமிழக வீரர் கே.இலக்கிய தாசன் (10.48 வினாடி) 2-வது இடமும், பஞ்சாப் வீரர் ஹர்ஜித் சிங் (10.55 வினாடி) 3-வது இடமும் பிடித்தனர்.




மன்ப்ரீத் கவூர் புதிய சாதனை:


ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை மன்ப்ரீத் கவுர் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 4 ஆண்டு தடை பெற்றதன் பிறகு இந்த தொடரில் கலந்துகொண்டார். குண்டு எறிதலில் மன்ப்ரீத் கவுர் 18.06 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். இதன் மூலம் புதிய தேசிய சாதனையைப் படைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான தகுதியைப் பெற்றார்.




இந்த தொடர் உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிக்குத் தகுதிச் சுற்றாக அமைந்துள்ள இந்தத் தொடரில் நாடு முழுவதும் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.