பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், “ 1992 ஆம் ஆண்டு ஆரம்பித்த கிரிக்கெட் பயணம் இந்த ஆண்டோடு 30 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. இப்போது வரை கிரிக்கெட் எனக்கு நிறைய விஷயங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் என்னால் பலருக்கு உதவ முடிந்தது.
இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி. காரணம் நான் இருக்கும் இன்றைய நிலைக்கு நீங்கள் கொடுத்தது. நான் இன்று பிறருக்கு உதவும் வகையிலான ஒரு முன்னெடுப்பிற்கான திட்டத்தை தொடங்கி இருக்கிறேன். எனது வாழ்வின் இந்த புதிய அத்தியாயத்திற்கும் உங்களது ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப்பதிவு அவரது பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டாரோ என்ற கேள்வி எழுப்பிய நிலையில் பல ஊடகங்கள் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில், பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா சவுரவ் கங்குலி பதவி விலக வில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.