சுதா கொங்கரா ஒரு ஜல்லிக்கட்டுக் காளை. அவரிடம் உள்ள திறமைகள் ஏராளம் என்று மாதவன் புகழ்ந்து பேசிய ஃப்ளாஷ் பேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இயக்குநர் சுதா கொங்கரா மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து கடந்த 2010ல் வெளியான துரோகி படத்தின் மூலம் தன்னை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார். படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அடுத்தடுத்து இறுதிச்சுற்று, சூரரை போற்று படங்களின் மூலம் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக உயர்த்திக் கொண்டுள்ளார். சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இந்தப் படம் கடந்த 2020ல் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. தொடர்ந்து புத்தம் புது காலை, பாவக்கதைகள் ஆகிய வெப் தொடர்களிலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா.


துரோகி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவதாக 6 ஆண்டுகள் கழித்து கடந்த 2016ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. ரித்திகா சிங் மற்றும் மாதவன் நடித்திருந்த இந்தப் படம் பல விருதுகளை பெற்றுத் தந்தது. சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு இளம்பெண் எவ்வாறு குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெறுகிறார், அதற்கு பயிற்சியாளராக மாதவன் எவ்வாறு மெனக்கெடுக்கிறார் மற்றும் அவர்களுக்கிடையிலான காதல் என செல்லும் கதையுடன் சிறப்பான திரைக்கதையால் படம் பெரும் வரவேற்பை பெற்றது. 


முதல் படம் சரியாக போகாததால் இரண்டாவது திரைப்படத்திற்கு அவ்வளவு இடைவெளி விழுந்தது என்று அவரே கூறியிருந்தார்.


இந்நிலையில் விருது விழா ஒன்றில்,  சுதா கொங்கரா ஒரு ஜல்லிக்கட்டுக் காளை. அவரிடம் உள்ள திறமைகள் ஏராளம் என்று மாதவன் புகழ்ந்து பேசிய ஃப்ளாஷ் பேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




அந்த விழாவில் மாதவன் பேசியது:


இதோ இருக்கிறாரே இந்த அழகான பெண் சுதா கொங்கரா. திரைப்படம் எடுப்பதில் ஒரு ஜல்லிக்கட்டு காளை. யாராலும் அடக்க முடியாத திறமை கொண்டவர். இந்த மேடையில் எங்களுக்கு முன் விருது பெற்ற ரஜினி சார், கமல் சார் எல்லோரும் தாங்கள் பெற்ற இமாலய வெற்றியை ஆமோதிப்பதில் காட்டிய தன்னடக்கத்தை கற்றுக்கொள்ள எத்தனை வருடங்கள் ஆகுமென்று எனக்குத் தெரியவில்லை என்றார்.


முன்னதாக பேசிய சுதா கொங்கரா, 20 ஆண்டுகளாக நான் சினிமா துறையில் பல தளங்களில் பயணித்திருக்கிறேன். ஆனால் இன்று இந்த உயரத்தை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இறுதிச் சுற்று படம் பல தயாரிப்பாளர்களின் கை மாறியது. அப்போது நான் ஒருமுறை மேடியிடம், நான் உனக்கு இந்த கதையை கொடுத்து விடுகிறேன், நீ பாப்புலர் இயக்குநர் வைத்து செய்து கொள் என்றேன். ஆனால், நீ தான் இதை செய்கிறாய் என்று பொறுமையுடன் ஊக்குவித்தார். என் வாழ்நாள் நண்பன் மேடி என்றார்.