சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய்,கஷ்யப்,சமீர் வெர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. 


இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து பெல்ஜியத்தின் லியானே டானை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் 7வது இடத்திலுள்ள பி.வி.சிந்து தரவரிசையில் மிகவும் பின் தங்கியுள்ள லியானே டானை எளிதாக எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் முதல் கேமை பி.வி.சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமையும் 21-11 என்ற கணக்கில் எளிதாக வென்றார். 






இதன்மூலம் 21-15,21-11 என்ற கணக்கில் பி.வி.சிந்து டானை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஏற்கெனவே மலேசியா ஓபன் மற்றும் மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். ஆகவே காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக நடைபெறும் இந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் சிந்து சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இன்று நடைபெறும் மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மால்விகா பன்சோத் என்பவரை எதிர்த்து விளையாட உள்ளார். அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் மித்துன் மஞ்சுநாத்தை எதிர்த்து விளையாடுகிறார். பிரணாய் தாய்லாந்து வீரர் தம்மாசினை எதிர்த்து விளையாட உள்ளார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வெர்மா லீ ஷி ஃபெங்கை எதிர்த்து விளையாட உள்ளார். இவர்கள் அனைவரு வெற்றி பெறும் பட்சத்தில் அனைவரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறுவார்கள். சிங்கப்பூர் ஓபனில் இந்திய வீரர் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண