தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் மீது மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமான பணியாளர் முத்துக்குமாரும், அவரது சகோதரரும், பிசியோதெரபிஸ்டுமான ஹரிஷ் ஸ்ரீகுமாரும் இணைந்து மாணவர்களுக்கு சிலம்பப் பயிற்சி, வாள்வீச்சு பயிற்சி, வேல்கம்பு உள்ளிட்ட தமிழர்களுக்கான பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சியை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் 16 பேர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற உள்ள 10 வயது 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான சிலம்பம், வாள்வீச்சு மற்றும் வேல்கம்பு ஆகிய போட்டிகளில் பங்கேற்க நேற்று விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு பஞ்சாப் சென்றுள்ளனர். இந்த 16 மாணவர்களில் 15 பேர் 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள். ஒருவருக்கு மட்டும் 27 வயது ஆகும்.
இந்த போட்டி தொடர்பாக, சிலம்பம் மாஸ்டர் முத்துக்குமார் ஏபிபி நாடுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “நாங்கள் சேவை மனப்பான்மையில் தமிழர்களின் கலைகளை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம். எங்களிடம் சுமார் 40 மாணவர்கள் வரை பயிற்சி பெற்று வருகின்றர். தற்போது 16 பேர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள ஓபன் நேஷனல் காம்பெடிஷனில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் பங்கேற்க உள்ளனர். அங்கு நடைபெற உள்ள சிலம்பம், வாள்வீச்சு, வேல்கம்பு உள்ளிட்ட போட்டிகளில் நமது மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். எங்களது மாணவர்கள் ஏற்கனவே தென்னிந்திய சிலம்பாட்ட கழகம் நடத்திய போட்டியில் 20 தங்கமும், 28 வெண்கலமும் வென்றுள்ளனர்.
பஞ்சாபில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்ததாக நேபாளம் நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். தற்போது, பஞ்சாப்பில் 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக எங்களது சொந்த செலவில்தான் நாங்கள் செல்கிறோம். மேலும், எங்களுக்கு விருதுநகரில் உள்ள சில நல்ல உள்ளங்களும் உதவி செய்தனர். எங்களைப் போன்ற பாரம்பரிய கலையை பயிற்றுவிப்பவர்களுக்கும், பாரம்பரிய கலைகளை ஆடும் மாணவர்களுக்கும் அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ள விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள அயன்ரெட்டியாபட்டியைச் சேர்ந்த விஜயகுமார்- அருள்ஜோதி தம்பதியினரின் மகளான நிதர்த்தினி கூறியதாவது, "நான் 10ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக சிலம்ப பயிற்சி பெற்று வருகிறேன். நாங்கள் தமிழ்நாடு சிலம்பாட்ட அகாடமி, தென்னிந்திய சிலம்பாட்ட அகாடமி நடத்திய போட்டிகள் என்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அந்த போட்டிகளில் ஆடி வெற்றியும் பெற்றுள்ளோம். தற்போது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக நாங்கள் செல்கிறோம். அந்த போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போட்டி முதலில் ஜம்மு-காஷ்மீரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கத்தை வென்ற வீரர்களைப் போன்று இவர்களும் எதிர்காலத்தில் தேசத்திற்காக பல பதக்கங்களை குவிக்க பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.