புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இங்கிலாந்து,ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் தீவிரமான சேதத்தை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளன. 


உருமாறிய டெல்டா வகை கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடாக இங்கிலாந்து உள்ளது. கடந்த ஒருவார காலமாக அதன் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் கடந்த நான்கு வாரங்களில் மேற்கொள்ளப்பட சார்ஸ்- கோவ்- 19 வைரஸ் மாதிரி ஆய்வுகளில், கிட்டத்தட்ட 88 சதவிகிதம் மாதிரிகள் டெல்டா வேறுபாட்டை கொண்டிருந்ததாக gisaid Variants Tracker போர்ட்டல் தெரிவிக்கிறது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இங்கிலாந்தில்  உறுதி செய்யப்பட்ட 90 சதவிகித பாதிப்புகள் டெல்டா வகை தொற்றுகளாக உள்ளது.  




    
 
கடந்தாண்டு, இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகையை ( B.1.1.7-Alpha) விட டெல்டா வகை கொரோனா தொற்றுகள் அதிகம் பரவக்கூடியவையாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், உருமாற்றம் அடியாக கொரோனா வைரஸ்களை விட டெல்டா வகை 90% அதிகம் பரவக்கூடியவை என்றும், ஆல்பா வகை கொரோனா தொற்றுகள் 29% கூடுதலாக பரவக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டது. 


 



WHO அறிக்கை


 


மேலும், இங்கிலாந்தில்  B.1.1.7-Alpha கொரோனா வகை ஏற்படுத்தி சேதங்களை விட, டெல்டா வகை ஏற்படுத்தும் சேதங்கள் அதிகரித்து காணப்படுவதாக lancent ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. மேலும், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதார  நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலும் டெல்டா வகையின் தீவிரத்தன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பிஃபிசர் - பயோஎன்டெக் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூச்சி (இந்தியா கோவிஷீல்டு) தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டவர்களில், 14 நாட்களுக்குப் பிறகு,  இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617 தொற்றை விட இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா பி.1.1.7 தொற்றுக்கு  கூடுதல் பாதுகாப்பை பெறுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.   
   
அமெரிக்கா:  அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்ட புதிய கொரோனா பாதிப்புகளில் 20 விழுக்காடு பாதிப்புகள் டெல்டா வகையை சார்ந்தது என அமெரிக்கா வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாசி தெரிவித்தார். நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா நோய்த் தொற்று அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக ஒழிக்கும் அமெரிக்காவின் முயற்சிகள் மிகப்பெரிய பின்னடைவாக அமையும்" என்றும் எச்சரித்தார். புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம்/ காலத்தை பார்க்கையில், அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும்  தெரிவித்தார்.  




அமெரிக்காவில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பூசி போதியளவு நிர்வகிக்கப்படாத பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. டெல்டா வகை கொரோனா பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த அதிபர் ஜோ பைடன், " கொரோனா தடுப்பூசிகளை மக்கள் முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்தார்.  


ஐரோப்பா:   வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஐரோப்பாவில் கண்டறியப்படும் 90  விழுக்காடு கொரோனா பாதிப்புகள் புதிய உருமாறிய டெல்டா வகையால் ஏற்படும் என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய (​ஈசிடிபிசி) இயக்குனர் Andrea Ammon தெரிவித்தார்.


 



போர்த்துகல்- தினசரி கொரோனா பாதிப்பு


கோடை காலங்களில் உருமாறிய டெல்டா வகை தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக,  தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செயல் திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாது. கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் கடந்த ஆண்டு சந்தித்த கொரோனா இறப்பு அவலநிலையை மீண்டும் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.