முச்சதங்களை நினைவு கூர்ந்த சேவாக் !


வீரேந்தர் சேவாக்... இந்தப் பெயரை கேட்டவுடன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர் குவித்த  முச்சதங்கள்தான் நினைவுக்கு வரும். 2004-ஆம் ஆண்டு இதே நாளில் முல்தான் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய முதல் முச்சதத்தை பதிவுசெய்தார் சேவாக். இன்சமாம்-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் அக்தர், முகமது ஷமி, சக்லைன் முஷ்தாக் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் இருந்த காலமது.




தொடக்க வீரராக களமிறங்கிய சேவாக் தன்னுடைய 100 மற்றும் 200 வது ரன்களை சிக்ஸ் அடித்து எட்டினார். 299 ரன்கள் இருக்கும் போதும் சச்சினின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் முஷ்தாக் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு முச்சதம் என்ற மிகப்பெரும் சாதனையை படைத்தார் சேவாக்.




சொல்லி வைத்தது போல நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதேநாளில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இரண்டாவது முறையாக முச்சதம் அடித்து மீண்டும் சாதனை படைத்தார் அவர். ஸ்டெயின், நிதினி போன்ற வலிமையான வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட அவர் டெஸ்டில் தன்னுடைய அதிகபட்ச ரன்களை குவித்தார். மார்ச் 29 என்கிற நாள் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் விதமாக இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய முச்சதத்தை ரசிகர்களின்  நினைவுகூர்ந்திருக்கிறார் சேவாக்.