உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு பாலியல் வன்புணர்வுக் குற்றம்சாட்டப்பட்ட கோவா ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 

 

தனது கைதுக்கு எதிராகப் பாதுகாப்பு வழங்கக்கோரி கோவா ஹோட்டல் உரிமையாளர் லோபோ என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதையடுத்து இன்று அவசரமாகக் கூடிய நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.





 

லோபோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறுகையில், 'இந்த வழக்கு முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதையாகும். வழக்கு பதிந்த பெண் டெல்லியைச் சேர்ந்தவர். 2008-இல் தான் ஹோட்டல் அதிபர் லோபோவைச் சந்தித்ததாகவும் அப்போது அவர் தன்னைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் டிசம்பர் 2020-இல் வழக்கு பதிவு செய்திருக்கிறார். கோவாவில் தனக்கு நீதி கிடைக்காது என்பதால் டெல்லியில் வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். தன் புகாரில் யாரோ ஜோசப் என்பவரையும் குறிப்பிடுகிறார்.

 



கோவாவில் ஆயிரக்கணக்கான பேர் ஜோசப் என்கிற பெயரில் உலவுகிறார்கள். அதனால் அந்த விவகாரத்தில் தெளிவில்லை. மேலும் கோவிட் ஊரடங்கு காலத்தில் கோவா ஹோட்டலில் பார்ட்டி வைப்பதற்காக சம்பந்தப்பட்ட பெண் லோபோவைத் தொடர்பு கொண்டிருக்கிறார். நோய்த்தொற்றின் காரணமாக அவர் அனுமதி மறுத்ததால் கோபமடைந்த அந்தப் பெண் வழக்கை ஜோடித்திருக்கிறார்' என்கிறார்.

 

ஹோலி தினமான இன்று கோவா ஹோட்டல் அதிபர் ஒருவருக்காக அவசரகதியில் உச்சநீதிமன்றம் கூடியிருப்பது கவனிக்கத்தக்கது.