ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 11 பவுண்டரிகள் உதவியுடன் 101* ரன்கள் குவித்தார். இது ஐபிஎல் தொடரில் வரலாற்றில் தேவ்தத் படிக்கல் முதல் சதமாகும்.


இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மிகவும் குறைந்த வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மனீஷ் பாண்டே(19 வயது 253 நாட்கள்) முதலிடத்திலும், ரிஷப் பண்ட்(20 வயது 218 நாட்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளார். தேவதத் படிக்கல் 20 வயது 289 நாட்களில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்துள்ளார். 


இந்நிலையில் நாட்டிற்காக களமிறங்குவதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் சதம் கண்ட வீரர்கள் யார் யார்? 




ஷான் மார்ஷ்(115):


2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஷ் களமிறங்கினார். அந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய இவர் 69 பந்துகளில் 115 ரன்கள் விளாசி தனது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இவர் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். 




மனீஷ் பாண்டே(114): 


2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மனீஷ் பாண்டே 73 பந்துகளில் 114 ரன்கள் விளாசி தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். அப்போது 19 வயதான மனீஷ் பாண்டே ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மனீஷ் பாண்டே 2015ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். 




பால் வால்தாட்டி (120):


2011-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் களமிறங்கிய பால் வால்தாட்டி சென்னையின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவர் 63 பந்துகளில் 120 ரன்கள் விளாசி ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 




தேவ்தத் படிக்கல் (101*):


நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இந்தியாவிற்காக அறிமுகம் ஆவதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் சதம் கடந்த வீரர்கள் பட்டியலில் படிக்கல் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.