"உங்களுக்காக நாங்கள் மனம் நொறுங்கிப்போனோம் செரீனா. எங்களின் 7 முறைய் சாம்பியன், காயம் காரணமாக 2021 போட்டியிலிருந்து விலகுகிறார்" - இது விம்பிள்டன் போட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான தகவல். இத்துடன் செரீனாவுக்கு காயம் ஏற்பட்ட அந்தத் தருணம் அடங்கிய வீடியோ கிளிப்பையும் அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.


விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். காயத்தால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. டென்னிஸ் ரசிகர்களுக்காகவே, ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டில் 3-வதாக நடைபெறும் போட்டி விம்பிள்டன் டென்னிஸ் போட்டி. லண்டனில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு உலகம் முழுவதுமிருந்து ரசிகர்கள் குவிவது உண்டு.










கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் ரத்தானது. இந்நிலையில், இந்த ஆண்டு பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே விம்பிள்டன் போட்டி தொடங்கியிருக்கிறது.


7 முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் களம் கண்டார். அவரை எதிர்த்து பெலாரஸ் நாட்டின் அலக்சாண்ட்ரா ஸஸ்னோவிச் களமிறங்கினர். ஆடுகளத்தில் இருவரும் மின்னலாய் சீறிக் கொண்டிருக்க திடீரென செரீனா சறுக்கி விழுந்தார். கணுக்காலைப் பிடித்துக்கொண்டு அவர் கதற ரெஸ்க்யூ டீம் அவரை மீட்டு முதலுதவி அளித்தது. சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால் ஆட்டம் தொடங்கி 34வது நிமிடத்தில் 3-3 என்ற செட் கணக்கில் போய்க்கொடிருந்த போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனால், சிறு ஆலோசனைக்குப் பின்னர் அவர் ஓய்வை அறிவித்தார். காயம் காரணமாக முதல் சுற்றிலேயே செரீனா விலகியது உலகளவில் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


7 முறை விம்பிள்டன் டைட்டில் வென்ற நாயகி 8-வது முறையாகவும் டைட்டில் வெல்லும் கனவு தகர்ந்ததால் கண்ணீர் சிந்தியது காண்போரின் மனதை உருக்கியது. 2017-இல் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் டைட்டிலை வென்ற பின்னர் எந்தவொரு க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லாமல் இருந்த செரீனா வில்லியம்ஸ் இந்தப் போட்டியை அதிகமாக எதிர்பாத்திருந்தார்.


ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் செரீனா பங்கேற்கவில்லை. அடுத்த செப்டம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் போட்டியில் தான் அவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அவருடைய இந்த நிலைக்கு டென்னிஸ் நட்சத்திரங்கள் பலரும் ஆறுதல் கூறியிருக்கின்றனர். ஆண்டி முரே தனது ட்விட்டர் பக்கத்தில் செரீனா வில்லியம்ஸுக்கு நடந்த கொடுமை இது. மைதானத்தில் நடுப்பகுதி வழுக்கும்தன்மையுடனேயே உள்ளது. அங்கே எளிதாக விளையாட முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.