டென்னிஸ் உலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த செரீனா வில்லியம்ஸ், தற்போது அதிலிருந்து விடைபெற்றுள்ளார். அமெரிக்க ஓபனின் மூன்றாவது சுற்றில் அஜ்லா டோம்லஜனோவிச்சிடம் தோல்வியடைந்த அவர் போட்டியிலிருந்து வெளியேறிள்ளார்.


இதையடுத்து, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிலிருந்து டென்னிஸ் ஜாம்பவானான பில்லி ஜீன் கிங் வரை பலர், செரீனா வில்லியம்ஸ்-க்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.


23 முறை கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றியுள்ள அவர், தனது கடைசி போட்டியில் 7-5, 6-7(4), 6-1 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர் ரசிகர்கள். தற்போதைய முன்னணி டென்னிஸ் வீரர்கள் முதல் முன்னாள் தடகள வீரர்கள் வரை அவரது மகத்தான சாதனையை நினைவுகூர்ந்து வருகின்றனர்.


அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "உங்களது மனது, திறமை, புத்திசாலித்தனம், அர்ப்பணிப்பு மற்றும் கருணை ஆகியவற்றிற்கு வாழ்த்துக்கள், செரீனா. சில விளையாட்டு வீரர்கள் மட்டுமே தங்கள் விளையாட்டிலும் அதற்கு அப்பாலும் அதிகமான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்!" என பதிவிட்டுள்ளார்.


செரீனாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா, "அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். குழந்தைகளிடம் உடற் பயற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.


பின்னரில், ட்விட்டரில் செரீனாவுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்ட மிச்செல் ஒபாமா, "காம்ப்டனைச் சேர்ந்த ஒரு இளம் பெண், சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக வளர்ந்ததை பார்க்க முடிந்ததில் நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள். என் நண்பரே, நான் உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன். மேலும் உங்கள் திறமைகளால் நீங்கள் தொடர்ந்து மாற்றியமைக்கும் வாழ்க்கையைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.


செரீனாவின் கடைசி போட்டியை மைதானத்தில் இருந்து பார்த்து ரசித்த டென்னிஸ் ஜாம்பவானான பில்லி ஜீன் கிங், "அவரது நம்பமுடியாத வாழ்க்கை டென்னிஸ் வரலாற்றில் தனி அடையாளத்தை உருவாக்கியது. இன்னும் அவரது மிகப்பெரிய பங்களிப்புகள் இன்னும் வரவில்லை. நன்றி, @serenawilliams. உங்கள் பயணம் தொடரும்" என பதிவிட்டுள்ளார்.


டென்னிஸை மாற்றியது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளித்து வருவதாக வில்லியம்ஸை நீச்சல் ஜாம்பவானான மைக்கேல் ஃபெல்ப்ஸ் பாராட்டியுள்ளார். "அவரது டென்னிஸ் சாதனைகள் நின்று பேசுகின்றன. ஆனால் நான் அவரை பற்றி ரசிக்கும் விஷயங்களில் ஒன்று, அவர் எளிதாக வெளியேறவில்லை" என்றும் ஃபெல்ப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.


தான் இன்னும் டென்னிஸ் விளையாடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று டைகர் உட்ஸ் என வில்லியம்ஸ் முன்னதாக கூறியிருந்தார். புதழ்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான அனெட் கொன்டவீட்டை செரீனா தோற்கடித்தார்.


இந்த போட்டியை நேரில் பார்த்து ரசித்த டைகர் உட்ஸ், "செரினாவில்லியம்ஸ், நீங்கள் போட்டியிலும் வெளியேயும் மிகச் சிறந்தவர். எங்கள் கனவுகளைத் தொடர எங்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. நான் உன்னை நேசிக்கிறேன் சிறிய சகோதரியே" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.