செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது முறை கர்ப்பமடைந்த செய்தியை தனது கணவர் அலெக்சிஸ் ஓஹானியனுடன் இணைந்து அறிவித்த நிலையில் டென்னிஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
செரீனாவுக்கு இரண்டாவது குழந்தை
மே 1 அன்று, மறைந்த டிசைனரைக் கௌரவிக்கும் வகையில் "கார்ல் லாகர்ஃபெல்ட்: எ லைன் ஆஃப் பியூட்டி" என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்ட 2023 மெட் காலாவிற்கான செரீனா வில்லியம்ஸ், அவரது கணவர் அலெக்சிஸ் ஓஹானியனின் உடன் வந்திருந்தார். அவர்களின் முறை வந்தபோது, முன்னாள் உலக நம்பர் 1 டென்னிஸ் வீரரான செரீனா வில்லியம்ஸ் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருப்பதை வெளிப்படுத்தினார்.
மெட் காலா 2023
மெட் காலா 2023 கர்ப்பத்தை அறிவிப்பதற்கான ஒரு தளமாக மாறியுள்ளது. செரீனா வில்லியம்ஸுக்கு முன், சூப்பர் மாடல் கார்லி க்ளோஸ் தனது குழந்தை பம்பையும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்லிக்கும் அது இரண்டாவது குழந்தை என்பதுதான் அதில் தற்செயலாக அமைந்த சிறப்பம்சம்.
குவியும் வாழ்த்துக்கள்
செரீனா, முழுக்க முழுக்க கறுப்பு நிற கவுன் அணிந்து, அலெக்சிஸுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்றார். அதோடு கழுத்தில் அணிந்திருந்த முத்து நெக்லஸ் பலரின் கண்களை ஈர்த்தது. இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
கார்ல் லாகர்ஃபெல்டுக்கு அஞ்சலி
அப்போது அவர் பேசுகையில், "நான் நன்றாக இருக்கிறேன், நான் இப்போது நன்றாக உணர்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். செரீனா வில்லியம்ஸ் பின்னர் வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்டுக்கு அஞ்சலி செலுத்தினார், "கார்ல்-உடைய வடிவமைப்புகள் எல்லாமே சிறப்பானது, அவர் ஒருபோதும் அவரது டிசைன் மூலம் ஏமாற்றியதில்லை. எனவே நாங்கள் இருவரும் இங்கு வந்து கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்", என்றார்.