பெண்களுக்கான 26 வது தேசிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் கேரளாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இன்று முக்கியமான போட்டியில் பஞ்சாப் அணியும் தமிழ்நாடு அணியும் மோதியிருந்தது. வென்றே ஆக வேண்டிய இந்த போட்டியில் தமிழக அணி 6-0 என அட்டகாசமாக வென்றுள்ளது.


இந்த தொடரில் அணிகள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பிடித்திருந்தன. தமிழக அணி H பிரிவில் இடம்பிடித்திருந்தது. தமிழகத்தோடு பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும். மற்ற அணிகள் தொடரை விட்டு வெளியேறும்.


தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் தெலுங்கானாவுக்கு எதிராக 20-0 என மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. அடுத்ததாக, வலுவான மேற்கு வங்கத்திற்கு எதிராக 1-1 என போட்டியை டிரா செய்திருந்தது. தமிழ்நாடு, பஞ்சாப், இரண்டு அணிகளுமே ஒரு போட்டியை வென்று ஒரு போட்டியை டிரா செய்து தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். ஆனாலும் புள்ளிப்பட்டியலில் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பஞ்சாபே முதல் இடத்தில் இருந்தது.


இதனால் இன்று நடைபெற்ற தமிழ்நாடு Vs பஞ்சாப் போட்டி Do or Die போட்டியாக அமைந்தது. இந்த போட்டியை வெல்லும் அணி காலிறுதிக்கு தகுதிப்பெறும் என்ற நிலை இருந்தது. இந்த சூழலிலேயே தமிழக அணி 6-0 என இந்த போட்டியை வென்றுள்ளது.






தமிழக அணியின் சார்பில் துர்கா 25 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து தமிழகத்திற்கு முன்னிலையை பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் கௌசல்யா ஒரு கோலை அடித்தார். இரண்டாவது பாதி மொத்தமும் சந்தியா புகுந்து விளையாடினார். 57, 84, மற்றும் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் என ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். தெலுங்கானாவுக்கு எதிரான போட்டியில் 8 கோல்களையும் மேற்கு வங்கத்திற்கு எதிராக 1 கோலையும் என 9 கோல்களை அடித்திருந்தார். இந்த போட்டியில் 3 கோல்கள் என 12 கோல்களை அடித்து அசத்தியிருக்கிறார். 87 வது நிமிடத்தில் பிரியதர்சினி ஒரு கோலை அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அணி 6 கோல்களை அடிக்க, பதிலுக்கு பஞ்சாப் அணியால் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. தமிழ்நாடு 6-0 என போட்டியை வென்றது.


இந்த போட்டியை வென்றதன் மூலம் Group H இல் முதலிடம் பிடித்து தமிழ்நாடு அணி காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது. டிசம்பர் 5 ஆம் தேதி காலிறுதி போட்டியில் ஒடிசாவுக்கி எதிராக தமிழ்நாடு மோதவிருக்கிறது.