கப்பலில் வேலை வாங்கி தருவதாக பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ. 48 லட்சத்தை இழந்ததாக சென்னையில் 43 இளைஞர்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களையும் நபர்களையும் தொடர்ந்து ஆங்காங்கே சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய எத்தனையோ பேர் மீதான வழக்குகள் நீதிமன்றங்களிலும் காவல்நிலையங்களிலும் குவிந்து கிடக்கின்றன. ஆனாலும் மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து ஆசைக்காட்டி பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றிவிட்டு சென்று விடுகின்றனர். அப்படிதான் சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 


சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத்(35). தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். 


அதில், “ஃபேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறது என்றும் கை நிறைய சம்பளம் கிடைக்கும். அதனால் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. நுங்கம்பாக்கத்தில் செயல்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று அந்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த விளம்பரம் குறித்து கேட்டபோது ரூ. 1 லட்சம் கொடுத்தால் அந்த வேலை உறுதி என தெரிவித்தார்கள். உடனே அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் ரூ. 1 செலுத்திவிட்டு குறிப்பிட்ட கப்பல் வேலைக்கு விண்ணப்பித்தேன்.  நேர்முகத்தேர்வு நடத்தினார்கள். அதிலும் கலந்து கொண்டேன். 


ஆனால் அந்த கப்பல் வேலை கிடைக்கவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுபோல 43 பேர் விண்ணப்பித்து ரூ. 48 லட்சத்தை இழந்துவிட்டோம். இதுதொடர்பாக அந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து நாங்கல் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக மனுவை பெற்றுக்கொண்ட ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 


சேதுபதி ஐபிஎஸ் படத்தில் கவுண்டமணி. கப்பல் வேலைக்கு ஆசைப்பட்டு வேலை பார்த்த முதலாளி வீட்டை அவமதித்து செல்வார். பின்னர் அங்கு ஏமாற்றப்பட்ட உடன், பழைய முதலாளியிடம் வந்து கெஞ்சுவார். இங்கு யாரும் இருந்த வேலையை இழக்கவில்லை. ஆனால், வேலை கிடைத்து விடும் என்கிற கவுண்டமணியின் அலாதி நம்பிக்கையை இவர்களும் பெற்றிருந்தனர் என்பதே உண்மை.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண