அம்பயர் கொடுத்த ஒயிட் பந்தை  (Wide ball)  தவறு என்று நிரூபிக்க டிஆர்எஸ் முறையை சஞ்சு சாம்சன் பயன்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஆட்டம் பரபரப்பாக போய்கொண்டிருக்க அம்பயர் நிதின் பண்டிட் கொடுத்த தவறான முடிவுகள் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை கடுமையாக வெறுப்பேற்றியது. 17வது ஓவரை ப்ரஷீத் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பாலை ரின்கு சிங் எதிர்கொண்டார். ஸ்டம்ப்பிலிருந்து நன்றாக ஆஃப் சைடில் ஏறி வந்து பந்தை அடிக்க முயன்றார் ரின்கு சிங். ஆனால் அவரது பேட்டில் பந்து படவில்லை. அந்த பந்திற்கு ஒயிட் கொடுத்தார் அம்பயர் நிதின் பண்டிட். அம்பயரின் இந்த முடிவைப் பார்த்து  அதிர்ச்சியடைந்தார் பண்ட்.


 






10 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில் 19வது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை ஆஃப் சைடில் வீசியபோது அந்த பந்தையும் ரின்கு அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை. இதற்கும் அம்பயர் ஒயிட் கொடுத்தார்.




அடுத்த பந்தை வீசியபோது ரின்கு ஆஃப் சைடில் நன்றாக விலகி வந்து அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டில் படவில்லை. இதற்கும் அம்பயர் ஒயிட் கொடுத்தார். அம்பயரின் தொடர் தவறான முடிவுகளால் கடுப்பான சஞ்சு சாம்சன் அம்பயரின் முடிவு தவறு என்பதை நிரூபிக்க முடிவு செய்து, அந்த பந்து எந்தவிதத்திலும் அவுட் கேட்பதற்கான வாய்ப்பில்லை என்றபோதும் டிஆர்எஸ் கேட்டார். 




குழப்பமடைந்த அம்பயர் டிஆர்எஸ் எடுக்க விரும்புகிறீர்களா என்று மீண்டும் கேட்டார். சஞ்சு சாம்சன் உறுதியாக இருக்கவே, ரிப்ளேயில் அது ஒயிட் பந்து இல்லை என்பது உறுதியானது.



அந்த ஓவரின் கடைசி பந்தை நிதிஷ் எதிர்கொண்டார். பிரஷித் வீசிய பந்து ப்ளேயிங் ஏரியாவை விட வெளியே சென்றது. நன்றாக விலகி வந்த நிதிஷ் அதை அடிக்க முயன்றார். ஆனால், அதுவும் பேட்டில் படவில்லை. அந்த பந்தையும் அம்பயர் ஒயிட் கொடுக்க சஞ்சு சாம்சன் விரக்தியின் உச்சத்திற்கேச் சென்றுவிட்டார்.




இறுதியில் 6 பந்துகளுக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் சிக்ஸர் அடித்து நிதிஷ் ஆட்டத்தை முடித்துவைத்தார். இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி வெற்றிபெற்றாலும் அம்பயர் கொடுத்த தவறான முடிவுகளும், அதை நிரூபிக்க சஞ்சு சாம்சன் டிஆர்எஸ் போனதும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.