இந்தியாவில் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வுபெற்றார். இந்தியாவுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி அசத்தினார். இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். டென்னிஸ் விளையாட்டில் தனக்கென மட்டுமில்லாமல், உலக அளவில் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர்.
இந்தநிலையில், சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், மிர்சாவுக்கு பிரிவு உபச்சாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியானது நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தெலுங்கான அமைச்சர்களாக கே.டி. ராமா ராவ், வீ. சீனிவாச கவுடு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான அசாருதீன், யுவராஜ், மலையாள நடிகர் துல்கர் சல்மான், சானியா மிர்சாவின் சிறந்த நண்பரான பெத்தானி மேட்டக் மற்றும் மிர்சாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சானியா மைதானத்தை அடைந்ததும், அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருக்கு கைதட்டி, பிரமாண்டமாக வரவேற்றனர். தனது பிரியாவிடை உரையில் சானியா மிர்சா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ எனது கேரியரின் கடைசிப் போட்டியில் உங்கள் அனைவரின் முன்னிலையிலும் விளையாடுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன் என்றார். 20 ஆண்டுகளாக எனது நாட்டிற்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். தனது நாட்டுக்காக உயர்மட்டத்தில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும், என்னால் அவ்வாறு செய்ய முடிந்தது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இவை மகிழ்ச்சியின் கண்ணீர் என்று கூறினார். இதைவிட சிறந்த பிரியாவிடையை நான் கேட்டிருக்க முடியாது. நான் டென்னிஸுக்கு விடைபெற்றாலும், இந்தியா மற்றும் தெலுங்கானாவில் உள்ள டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்பேன், மேலும் அதை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து பாடுபடுவேன் என்றார். இந்த பேச்சுக்குப் பிறகு, சானியா மிர்சா கடைசி போட்டியில் விளையாடினார், அப்போதைய தெலுங்கானா விளையாட்டு அமைச்சர் வி ஸ்ரீனிவாஸ் கவுடும் சானியாவுக்கு மரியாதைக்குரிய உரையுடன் அற்புதமான பிரியாவிடை அளித்தார்.
தொடர்ந்து தனது கடைசி போட்டியில் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரண்டு கலப்பு போட்டியிலும் சானியாவே வெற்றிபெற்றார்.
சானியா ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் டென்னிஸ் ஸ்டேடியத்தில் தனது தொழில் வாழ்க்கையின் கடைசி போட்டியில் விளையாடினார். இதே மைதானத்தில்தான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஒற்றையர் பட்டத்தை வென்றதன் மூலம் பிரமாண்டமாக அறிமுகமானார்.