மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ் – குஜராத் அணிகள் மோதின. முதல் போட்டியிலே தோல்வி அடைந்த குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் வந்தது. டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய குஜராத் வீராங்கனைகள் அதிரடியாகவே ஆடினர். டங்க்லி 13 ரன்களில் அவுட்டானதும், மேக்னா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்லீன் தியோல் 46 ரன்களை விளாச, கார்ட்னர் 25 ரன்களையும், ஹேமலதா 21 ரன்களையும் எடுத்தனர். இதனால், இறுதியில் உத்தரபிரதேச அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


அடுத்தடுத்து விக்கெட்:


170 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய உத்தரபிரதேச அணிக்கு தொடக்கமே மோசமா அமைந்தது. கேப்டன் ஹேலி 7 ரன்னில் அவுட்டாக, ஸ்வேதா 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தஹிலா மெக்ராத் டக் அவுட்டாக 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை உத்தரபிரதேசம் இழந்தது. பின்னர் கிரண் – தீப்தி ஜோடி நிதானமாக ஆடியது.


மறுமுனையில் கிரண் நிதானமாக தொடங்கி அதிரடிக்கு மாறிக்கொண்டிருந்தார். இதனால், ஆட்டத்தில் சூடுபிடித்தது. அப்போது, தீப்தி 11 ரன்களில் அவுட்டாக கிரேஸ் ஹாரீஸ் களமிறங்கினார். மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த கிரண் அவுட்டானார். அவர் 43 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிம்ரன் டக் அவுட்டாக, தேவிகா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 105 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் உத்தரபிரதேசம் சிக்கிக் கொண்டிருந்தது.


ஒரே ஓவரில் 19 ரன்கள்:


25 பந்துகளுக்கு 65 ரன்கள் என்ற நெருக்கடி நிலையில், குஜராத்தே வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஹாரீஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். அவரது அதிரடியை பார்த்த குஜராத் வீராங்கனைகள் விழிபிதுங்கினர் என்றே சொல்லலாம். எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்பது போல பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார். அவரது அதிரடியால் உத்தரபிரதேச ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.


அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த சோபியாவும் தானும் சளைத்தவள் இல்லை என்பது போல சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற சூழலில்,  1 பந்து மீதம் வைத்து சிக்ஸர் அடித்து உத்தரபிரதேச அணி இலக்கை எட்டியது. தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த உத்தரபிரதேச அணியை வெற்றி பெற வைத்த கிரேஸ் 26 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சோபியா 12 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.


சொதப்பிய குஜராத்:


குஜராத் அணியில் அனபெல் 3.5 ஓவர்கள் வீசி 41 ரன்களை வாரி வழங்கினார். மற்ற வீராங்கனைளும் பந்துவீச்சில் சொதப்ப, ஒயிட், நோ பாலும் உத்தரபிரதேசத்திற்கு சாதகமாக அமைந்தது. இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது என்பதில் எந்த சந்தேகமுமே இல்லை. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த குஜராத் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.