மத்திய அரசு மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையிலும், கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதையடுத்து, திட்டமிட்டபடி நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு :
தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வு மொத்தம் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட 18 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17 ஆயிரத்து 996 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 33 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, இந்த தேர்வு கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலே முதன்முறையாக இந்த முறை நடத்தப்படும் நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. முதன்முறையாக பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழில் மட்டும் தேர்வு எழுத 19 ஆயிரத்து 867 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
16 லட்சம் மாணவர்கள்:
நீட் தேர்வு சரியாக மதியம் 2 மணியளவில் தொடங்க உள்ளது. இருப்பினும், வழக்கமாக நீட் தேர்விற்கு மேற்கொள்ளப்படும் கெடுபிடிகள், பரிசோதனைகள் இருப்பதால் மாணவர்கள் 1.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வருவது சிறப்பானதாகும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.
நாடு முழுவதும் நீட் தேர்வு 198 நகரங்களில் உள்ள 3 ஆயிரத்து 862 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
அறிவு
ரைகள் :
தேர்வுகள் தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்பாக, அதாவது சுமார்1 மணி முதல் 1.30 மணிக்குள்ளே மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு பின்பு, வரும் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வு அறைகள் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலே மாணவர்களுக்கு என்-95 முகக்கவசம் வழங்கப்படும்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம், 50 மில்லி லிட்டர் சானிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டின் முதல் பக்கத்தில் கொரோனா குறித்த சில கேள்விகளும் இடம்பெற்றுள்ளது.
இதுதவிர, மின்னணு கைகடிகாரம், கைப்பைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட வேறு எதையும் தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுத வரும் அனைவரும் வெளிர்நிற அரைக்கை ஆடைகளையே அணிய வேண்டும். ஷூ அணியக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.