உலகளவில் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சானியா மிர்சா சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து முழுவதும் ஓய்வு பெற்றுள்ளார். துபாயில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்த பிறகு அவர் டென்னிஸிற்கு விடை கொடுத்துள்ளார்.  






அவரது ஓய்வு இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


சானியா மிர்சா:


உலகளாவில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தவர் சானியா மிர்சா. இவர் துபாயில் நடைபெற்று வரும் துபாய் டூட்டி ப்ரீ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசனுடன் களமிறங்கினார். இந்த ஜோடி ரஷ்யாவின் வெர்னோகியா- லியூடிமிலாவுடன் மோதியது. போட்டி தொடங்கியது முதல் ரஷ்ய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியதால் சானியா மிர்சா – மேடிசன் ஜோடி 4-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது.


இந்த தோல்வியுடன் சானியா மிர்சா தனது சர்வதேச டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுள்ளார். 36 வயதான சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் உலகின் தலைசிறந்த வீராங்கனையாக வலம் வந்தவர். அவர் இதுவரை மொத்தம் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து வாங்கியது.


கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்:


மார்ட்டினா ஹிங்கிஸ் – சானியா மிர்சா ஜோடி எப்போதுமே எதிர் தரப்பு வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர். மகேஷ் பூபதியுடன் இணைந்து 2009ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், 2012ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை கலப்பு இரட்டையர் பிரிவில் வென்று அசத்தியுள்ளார்.


இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே சானியா மிர்சா தன்னுடைய கடைசி டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெறும் இந்த தொடர் என்று கூறியிருந்தார். மேலும், அவர் டென்னிஸ் எனது வாழ்வில் எப்போதும் மிக, மிகப்பெரிய முக்கியமான அங்கம் ஆகும். ஆனால், அது என் முழு வாழ்க்கையும் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒற்றை, இரட்டையர் பிரிவில் அசத்தல்:


இரட்டையர் பிரிவில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியாமிர்சா ஒற்றையர் பிரிவிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிகபட்சமாக மகளிர் தரவரிசையில் 27வது இடம் வரை பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அளவில் இதுவரை வேறு எந்த வீராங்கனையும் இந்த சாதனையையை எட்டிப்பிடிக்கவில்லை. காயம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் அவரால் தொடர்ந்து ஒற்றையர் பிரிவில் கவனம் செலுத்த முடியவில்லை.


சானியா மிர்சா 1986ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பையில் பிறந்தவர். சானியா மிர்சாவின் தந்தை ஒரு விளையாட்டு ஊடகவியலாளர் ஆவார். சானியா மிர்சா தன்னுடைய 6 வயது முதல் டென்னிஸ் ஆடி வருகிறார். 2003ம் ஆண்டு தொழில்முறை வீராங்கனையாக களமிறங்கினார். ஜூனியர் அளவில் 10 ஒற்றையர் பிரிவிலும், 13 இரட்டையர் பிரிவிலும் பதக்கம் வென்றுள்ளார்.


சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்காக செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு 2004ம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.