இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த வந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை கிளப்பின.


நாட்டை திரும்பி பார்க்க வைத்த மல்யுத்த வீரர்களின் போராட்டம்:


பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் மல்யுத்த கூட்டமைப்பில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர்.


பெரும் அழுத்தத்தை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இப்படிப்பட்ட சூழலில், மல்யுத்த கூட்டமைப்பின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்றார்.


மல்யுத்த வீரர்களின் ஆதரவோடு தேர்தலில் நின்ற மல்யுத்த வீராங்கனை அனிதா ஷியோரன் தோல்வி அடைந்தார். இவர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.


செய்தியாளர் சந்திப்பில் கண் கலங்கிய வினேஷ் போகட்:


கடும் எதிர்ப்புக்கு பிறகும், பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் வெற்றி பெற்றிருப்பது மல்யுத்த வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான சாக்சி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் முடிவுகள் குறித்து அதிர்ச்சி தெரிவித்த சாக்சி மாலிக், "மல்யுத்த கூட்டமைப்புக்கு ஒரு பெண் தலைவர் வர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது நடக்கவில்லை. நாங்கள் போரிட்டோம். ஆனால், புதிய தலைவராக பிரிஜ் பூஷனின் உதவியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொழிலில் அவரது கூட்டாளி. எனவே, மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுகிறேன்" என்றார்.


செய்தியாளர் சந்திப்பின்போது அழுத வினேஷ் போகட், "இப்போது கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், பெண் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வார்கள். இந்த நாட்டில் நீதியை எங்கிருந்து தேடுவேன். அதற்கான எந்த துப்பும் என்னிடம் இல்லை. எங்கள் மல்யுத்த வாழ்க்கையின் எதிர்காலம் இருளில் உள்ளது. எங்கே போவது என்று தெரியவில்லை" என்றார்.


தொடர்ந்து பேசிய பஜ்ரங் புனியா, "அரசாங்கம் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லை. நாங்கள் அரசியலுக்காக இங்கு வரவில்லை. நாங்கள் உண்மைக்காகப் போராடினோம். ஆனால், இன்று பிரிஜ் பூஷண் சிங்கின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகியுள்ளார்" என்றார்.