இருபது ஆண்டுகளுக்கு மேல் தன் விளையாட்டால் பலரையும் ஈர்த்து வரும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வாழ்த்தி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.


டென்னிஸ் போட்டிகளில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முன்னதாக ஓய்வு பெற்ற நிலையில் அவரது ரசிகர்களும், சக விளையாட்டுத்துறையைச் சேர்ந்த வீரர்களும் இணையத்தில் அவரை வாழ்த்தியும், பிரியாவிடை அளித்தும் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் முன்னதாக் செரீனாவை வாழ்த்தி சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. “வயது என்பது உடல் உங்களுக்குச் சொல்வதல்ல, உங்கள் மனம் உடலுக்கு என்ன சொல்கிறது என்பதே வயது.


பதின்வயதினர் உலகின் மிகப்பெரிய பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியும், வயதில் மூத்தவர்கள் புதியவற்றை கற்றுக் கொண்டு சிறந்து விளங்கவும் செய்யலாம்.


அந்த வகையில் விளையாட்டு எல்லைகளை உடைப்பதற்கும் சாத்தியமற்றதை அடையவும் சமூகத்தை ஊக்குவிக்கிறது. பிறரை ஊக்குவிக்கும் இப்படிப்பட்ட உத்வேகமூட்டும் கரியரை கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள்" என சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.






செரீனாவைப் பாராட்டி சச்சின் பகிர்ந்த இந்த ட்வீட் சுமார் அரை மணி நேரத்தில் நான்காயிரத்துக்கும் மேல் லைக்குகளைப் பெற்று வைரல் ஆகியுள்ளது. மேலும், டென்னிஸ் ஜாம்பவானுக்கு கிரிக்கெட் கடவுள் வாழ்த்தியுள்ளார் என ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கமெண்டுகள் பகிர்ந்தும் வருகின்றனர்.






இதேபோல் செரீனாவை வாழ்த்தி ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த அமெரிக்க நீச்சர் வீரர் மைக்கெல் ஃபெல்ப்ஸ், கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோரும் ட்வீட் செய்துள்ளனர்.


 






டென்னிஸ் உலகில் செரீனா:


டென்னிஸ் விளையாட்டில் செரீனா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக இவர் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.  அத்துடன் 14 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 2 கலப்பு இரட்டையர் பிரிவிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். 


இவை தவிர மகளிர் டபிள்யூடிஏ 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார். இவற்றுடன் சேர்ந்து 4 ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றுள்ளார். இவருடைய நீண்ட நெடிய டென்னிஸ் வாழ்க்கையில் 319 வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்து சாதனைப் படைத்தார். 


செரீனா வில்லியம்ஸ் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் இவர் எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை.