உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் போலாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்றன. இதில் மகளிர் அணி 7 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
ஆடவர் பிரிவில் 56 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சச்சின் சிவாச்சி கஜகஸ்தான் நாட்டின் சபர் யெர்போலட்டை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சச்சின் கஜகஸ்தான் வீரரை திணறடித்தார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் யெர்போலட்டை தோற்கடித்து சச்சின் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக யூத் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 8 தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் சிவாச்சி. இவர் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு சிறு வயது முதல் குத்துச்சண்டை மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனினும் இவருடைய குடும்ப சூழல் இவரை விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய மாமாவின் உதவியுடன் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளரிடம் பயிற்சி பெற சென்றுள்ளார். பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தால் கேலோ இந்தியா திட்டத்திற்கு தேர்வானார். தற்போது உலக யூத் சாம்பியன்ஷிப் வரை சென்று அங்கு தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக மகளிர் பிரிவில் கீத்திகா(48 கிலோ), பூணம்(57 கிலோ), அருந்ததி செளத்ரி (69 கிலோ), சானாமச்சு சானு(75 கிலோ), அல்ஃபியா பதான்(81+ கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும் ஆடவர் பிரிவில் பிஸ்வாமித்ரா சோங்தம் (49 கிலோ எடைப் பிரிவு), அன்கித் நர்வால் (64 கிலோ எடைப் பிரிவு), விஷால் குப்தா (91 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றனர். மொத்தமாக இந்த உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 8 தங்கம் மற்றும் 3 வெண்கலம் என 11 பதக்கங்களை அள்ளி மகத்தான சாதனையை படைத்துள்ளது. மேலும் மகளிர் பிரிவில் 7 தங்கப் பதக்கம் வென்று 2017-ஆம் ஆண்டு படைத்திருந்த சாதனையை இந்தியா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.