இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை நேற்று வெளியிட்டது. அதில் ரிஷப் பண்ட் 6ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடங்களை பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங் தரவரிசையில் 19ஆவது இடத்தை பிடித்திருந்தார். அதனை தற்போது ரிஷப் பண்ட் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக அந்தத் தொடரின் போது தனது 27ஆவது இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ரன்களை கடந்து அசத்தினார். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் 500 டெஸ்ட் ரன்கள் மேல் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதன்பின்னர் மீண்டும் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் ரிஷப் பண்ட் தனது சிறப்பான ஃபார்மை தொடர்ந்தார். இந்திய மண்ணில் தனது முதல் சதத்தை ரிஷப் பண்ட் இத்தொடரில் அடித்து அசத்தினார். இந்த சிறப்பான பேட்டிங்கினால் தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றும் கண்டுள்ளார்.
மேலும் இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5ஆவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மாவும் ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து 6ஆவது இடத்தை பகிரந்துள்ளார். ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட் ,ரோகித் சர்மா மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகியோர் பகிர்ந்துள்ளனர். இவர்கள் மூவரும் 747 தரவரிசை புள்ளிகளுடன் உள்ளனர். இந்தப் பட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். டாப் 10 இடங்களில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.