உலகிலேயே மிக பிரமாண்டமான நட்சத்திர கிரிக்கெட் தொடராக வலம் வருகிறது ஐபிஎல். Duff and phelps என்னும் பிரபல நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட கணக்கின்படி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஈட்டிய வருமானம் 6.2 பில்லியன் டாலர்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள தகவலின்படி கடந்தாண்டு வருமானம் 4000 கோடி ரூபாய். உலகிலேயே வேறெந்த கிரிக்கெட் தொடரிலும் இவ்வளவு பெரிய தொகை புழங்காது.



ஐபிஎல் 2021 தொடரில் 60 போட்டிகள், 52 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் வீரர்கள் பலருக்கு தொடர் நடுவே ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் தொடர் கைவிடப்பட்டுள்ளது. 24 நாட்கள் மட்டுமே நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தமே 29 போட்டிகள் தான் நிறைவடைந்துள்ளன. இதனால் ஐ.பி.எல் தொடரின் ஆண்டு வருமானத்தில் ஏறக்குறைய பாதி தொகை 2,200 கோடி ரூபாய் இழப்பை இந்தாண்டு சந்திக்க உள்ளது பி.சி.சி.ஐ. ஐபிஎல் தொடரில் மிக பெரிய வருமானம் என்பது போட்டிகளின் ஒளிபரப்பு உரிமமே. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 16347 கோடி ரூபாய்க்கு ஐந்தாண்டிற்கான ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியுள்ளது. அதன்படி அனைத்து போட்டிகளும் நடைபெற்றால் ஓராண்டிற்கு 3270 கோடி ரூபாய் தொகையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிசிசிஐ-க்கு வழங்கும். அந்த வகையில் போட்டிக்கு 54.5 கோடி ரூபாய் நஷ்டம், சுமார் 1690 கோடி ரூபாய் நஷ்டத்தை 31 போட்டிகளை நடத்த முடியாத காரணத்தால் பிசிசிஐ சந்திக்கிறது.



மேலும் டைட்டில் ஸ்பான்ஸர் விவோ நிறுவனம் 440 கோடி ரூபாய், இணை ஸ்பான்ஸர்களான unacademy, dream 11, upstox, tata நிறுவனங்கள் தலா 120 கோடி ரூபாய் வழங்குகின்றனர். இது அனைத்திலுமே பாதிக்கும் குறைவன வருவாய் மட்டுமே இந்தாண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும்.


ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஐபிஎல் அணிகளும் - இந்திய கிரிக்கெட் வாரியமும் 50/50 முறையில் செயல்படுகின்றன. அதாவது மொத்தமாக வர கூடிய வருவாயில் 50 சதவீதம் கிரிக்கெட் வாரியமும், 50.சதவீதம் ஐ.பி.எல் அணிகளும் எடுத்துக்கொள்ளும். இதில் வரும் வருவாய் மூலம் அந்தந்த அணிகள் தங்கள் வீரர்களுக்கு சம்பளத்தை வழங்கும்.



ஐபிஎல் 2021 தொடரில் வீரர்களுக்கு மட்டும் 483 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழலில் நிர்வாகமே கைவிட்டுள்ளதால், பெரும்பாலும் முழு சம்பளமும் வீரர்களுக்கு வழங்கப்படும் என்றே தெரிகிறது. போட்டிகள் நடத்தப்படும் மைதானம் சார்ந்த கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு போட்டிக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு ஐ.பி.எல் வருமானம் பிரித்துக்கொள்ளப்படும் நிலையில், இதனை நஷ்டம் என குறிப்பிடுவதை விட, லாபத்தில் 2200 கோடி ரூபாய் குறைந்துள்ளது எனக் குறிப்பிடுவதே சரியாக இருக்கும். 


ஆனால் ரசிகர்கள் பலர் வெறும் 29 போட்டிகளை காண ஹாட் ஸ்டார் செயலியை ஓராண்டிற்கு 399 ரூபாய் என சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அப்படி என்றால் உண்மையில் நஷ்டம் அடைந்தவர்கள் யார் ?