ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில், கடைசி பந்தில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தார். ஆனால், இந்த சிக்ஸர் கணக்கில் கொள்ளப்படாது என்று கூறியுள்ள ஐசிசி அதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளது. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனிடையே தான் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.


இந்தியா வெற்றி:


இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனிடையே, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில்,சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.


இந்நிலையில், கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில், களத்தில் நின்ற ரிங்கு சிங் ஆஸ்திரேலிய வீரர் சீன் அபோட் வீசிய முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடுத்தார். அப்போது 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல்  உருவாகியது. அப்போது ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்து வீசப்பட்ட 3 வது பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழக்க, 4 பந்தில் ரவி பிஷ்னோய்யும், 5 வது பந்தில் அர்ஷ்தீப் ரன் அவுட் ஆக ரிங்கு சிங் ஸ்ட்ரைக் ஆடினார். கடைசி பந்தில் ஒரு ரன் இந்திய அணிக்கு தேவைப்பட்டது.


கடைசி பந்தில் சிக்ஸர்: 


அப்போது  ஆஸ்திரேலியா அணியின் சீன் அபோட் வீசிய பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் தனேக்கு உரித்தான ஷாட் மூலம் சிக்ஸர் பறக்க விட்டார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது.


இதனிடையே, ரிங் சிங் அடித்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றது எப்படி என்ற குழப்பம் நிலவியது. அதேநேரம்,  சீன் அபோட் வீசிய பந்து நோ- பால் என நடுவர் அறிவித்தார். இதனால், நோ-பாலுக்கு வழங்கப்படும் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. ரிங்கு சிங் பறக்கவிட்ட சிக்ஸர் ரன்கள் அவருக்கும் அணிக்கும் சேர்க்கவில்லை. 


ஐசிசியின் விளக்கம்:


ஐசிசி ஆண்கள் விளையாடும் டி20 போட்டிகளின் நிபந்தனைகளின்படி, பிரிவு 16.5.1: “பிரிவுகள் 16.1, 16.2 அல்லது 16.3.1 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி முடிவு எட்டப்பட்டவுடன், போட்டி முடிவடைகிறது. பிரிவு 41.17.2 (பெனால்டி ரன்கள்) தவிர, அதன் பிறகு நடக்கும் எதுவும் அதன் ஒரு பகுதியாக கருதப்படாது.


நோ பால் வீசப்பட்டவுடன், இந்தியா தனது இலக்கை அடைந்துவிட்டதால், ரிங்கு சிங் எடுத்த 6 ரன்கள் சேர்க்கப்படாது என்பதே இந்த விதி.  அதேநேரம்,  இந்தியா வெற்றி பெற ஒன்றுக்கு மேல் ரன் தேவைப்பட்டிருந்தால், ரிங் சிங் அடித்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும்” என்பது போன்ற விதிகள் இருப்பதாக ஐசிசி கூறியுள்ளது.