ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸ். இவர் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். வரும் 9-ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணி மும்பை அணியுடன் மோத உள்ளது.
இந்த நிலையில், அந்த அணியில் இடம்பெற்றுள்ள டேனியல் சாம்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டேனியல் சாம்ஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
நாளை மறுநாள் போட்டித் தொடங்க உள்ள நிலையில், டேனியல் சாம்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல்லுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.